வாஷிங்டன்: ஹெச்1பி விசா முறையில் வெளிநாட்டவர்களை பணிக்கு அமர்த்துவதற்கு அமெரிக்க அரசாங்கம் குறிப்பிட்ட அளவிலான சம்பள வரம்புகளை நிர்ணயம் செய்ய இருக்கிறது. தற்போது நடைமுறையில் இருக்கும் சம்பளத்தை விட அது கூடுதலாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இது நடைமுறைக்கு வந்தால் அமெரிக்க நிறுவனங்களுக்கு தான் சிக்கல் ஏற்படும்.
அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் வெளிநாடுகளை சேர்ந்த திறமையான தொழில்நுட்ப நிபுணர்களை அமெரிக்காவில் பணிக்கு அமர்த்துவதற்காக ஹெச்1பி விசாவை பயன்படுத்திக் கொள்கின்றன. இப்படி தான் இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பல்வேறு தொழில்நுட்ப நிபுணர்களும் அமெரிக்காவிற்கு சென்று வேலை செய்து வருகின்றனர்.

2023 ஆம் ஆண்டில் இந்த விசா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 3,86,000 விசாக்களில் 72.3% இந்தியர்களுக்கு தான் வழங்கப்பட்டுள்ளது. எனவே தான் ஹெச்1பி விசாவில் கொண்டுவரப்படும் எந்த ஒரு மாற்றமும் இந்தியர்களால் உன்னிப்பாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஹெச்1பி விசா மூலம் அமெரிக்காவிற்கு வரக்கூடிய வெளிநாட்டவர்களால் அமெரிக்கர்களுக்கான வேலை வாய்ப்பு பறிபோவதாக தொடர்ந்து ஒரு சர்ச்சை இருந்து வருகிறது.
அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்ட் டிரம்பே ஹெச்1பி விசாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர் தான். இந்த நிலையில் ஹெச்1பி விசா முறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. ஹெச்1பி விசா மூலம் ஊழியர்களை பணிக்கு அமர்த்தும் போது அவர்களுக்கு கண்டிப்பாக குறிப்பிட்ட அளவிலான தொகை ஊதியமாக வழங்கப்பட வேண்டும் என பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டவர்களை ஹெச்1பி விசா மூலம் பணிக்கு சேர்க்கும் போது தற்போது வழங்கப்படும் ஊதியத்தை விட அதிக அளவு ஊதியம் வழங்க வேண்டியதாக இருக்கும்.
இதனால் இந்த நிறுவனங்கள் வெளிநாட்டவர்களை விடுத்து அமெரிக்காவை சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் என்பது அரசின் கணக்கு. இதனிடையே இந்த ஊதிய வரம்பு தொடர்பாக நடத்தப்பட்ட ஒரு ஆய்வு இந்த புதிய திட்டத்தின் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களை வெளிநாடுகளில் இருந்து பணிக்கு அமர்த்துவதை பெரிய அளவில் பாதிக்கும் என தெரிவித்துள்ளது.
தேசிய அமெரிக்க கொள்கைக்கான அறக்கட்டளை என்ற அமைப்பு இந்த ஆய்வினை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது. தற்போது அமெரிக்க அரசு வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த முன்மொழிவு மூலம் நிறுவனங்கள் ஹெச்1பி விசாவில் வரக்கூடிய ஊழியர்களுக்கு தற்போது இருப்பதை விட அதிகபட்ச சம்பளத்தை வழங்க வேண்டியது இருக்கும். இதனால் வெளிநாட்டை சேர்ந்த திறமைமிகு ஊழியர்களை அமெரிக்கா வரவழைத்து வேலைக்கு அமர்த்துவது நிறுவனங்களுக்கு அதிக செலவு கொண்டதாக மாறும் என தெரிவித்துள்ளது.
அமெரிக்க அரசின் இந்த பரிந்துரை மூலம் அமெரிக்காவில் செயல்படக்கூடிய நிறுவனங்கள் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்காமல் தங்களுடைய வேலைகளை வெளிநாடுகளுக்கு மாற்றுவதற்கான வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. திறன்மிகு ஊழியர்களை பணிக்க அமர்த்த முடியாமல் நிறுவனங்கள் தடுமாறும் போது பணிகளை அவுட்சோர்சிங் செய்யும் வாய்ப்பு அதிகமாகும் என தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் தற்போது எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் பயிலும் மாணவர்களில் பலர் வெளிநாட்டவர்கள் தான். இவர்களை பணித்து அமர்த்துவதற்கு அமெரிக்க நிறுவனங்கள் பல லட்சம் டாலர்களை கூடுதலாக செலவு செய்ய வேண்டி இருக்கும். எனவே இவர்கள் இங்கே படித்து திறமைகளை வளர்த்துக்கொண்டு சொந்த நாடுகளுக்கு சென்று விடுவார்கள் இதனால் அமெரிக்காவிற்கு என்ன பயன் என இந்த ஆய்வு அறிக்கை கேள்வி எழுப்பியுள்ளது.
அரசு இந்த நடவடிக்கையை தொடர்ந்தால் தகவல் தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் பிரிவில் உலக தலைவராக தற்போது இருக்கும் இடத்தை அமெரிக்கா இழக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவில் செயல்பட்டு வரக்கூடிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், அறிவியல் ,பொறியியல் துறைகளில் இயங்கும் நிறுவனங்கள் ஹெச்1பி விசா வாயிலாகவே வெளிநாட்டு பணியாளர்களை அமெரிக்காவிற்கு வரவழைத்து வேலையில் அமர்த்துகின்றன. இந்தியாவை சேர்ந்த டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜி ஆகிய நிறுவனங்களும் கூட ஹெச்1பி விசா அடிப்படையில் தான் பணியாளர்களை தேர்வு செய்து அமெரிக்காவில் ஆன் சைட் பணிக்காக அனுப்புகின்றன.
முன்னதாக அமெரிக்க கொள்கைகளுக்கான தேசிய அறக்கட்டளை என்ற நிறுவனம் ஹெச்1பி விசா விண்ணப்பங்கள் தொடர்பான ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டது. இதன்படி 2024 ஆம் நிதி ஆண்டில் இந்தியாவை சேர்ந்த 7 ஐடி நிறுவனங்கள் மொத்தம் 7,299 ஹெச்1பி விசாக்களுக்கு மட்டுமே விண்ணப்பம் செய்து அனுமதி பெற்றுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஹெச்1பி விசா மூலம் ஊழியர்களை அமெரிக்காவில் பணிக்கு அமர்த்தும் அளவு 56 சதவீதம் வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது இந்திய நிறுவனங்கள் ஏற்கனவே இந்த விசா பயன்பாட்டை குறைத்துவிட்டன.
அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதே இந்திய டெக் நிறுவனங்களின் இந்த முடிவுக்கு காரணம் என சொல்லப்படுகிறது. ஆனால் அமெரிக்காவை சேர்ந்த அமேசான் நிறுவனம் 2022 ஆம் ஆண்டில் 6,396 ஹெச்1பி அனுமதிகளை பெற்றிருந்ததாம் அதுவே 2023இல் 4,052 என்றும் 2024 ஆம் ஆண்டில் 3,871 என்றும் குறைந்துள்ளது. காக்னிசெண்ட் நிறுவனம் 2837, இன்ஃபோசிஸ் 2504, டிசிஎஸ் 1452, ஐபிஎம் 1348, மைக்ரோசாப்ட் 1264, ஹெச்சிஎல் அமெரிக்கா 1248, கூகுள் 1058, கேப் ஜெமினி 1041 ,மெடா 920 என்ற எண்ணிக்கையில் தான் ஹெச்1பி விசாக்களை பெற்று ஊழியர்களை பணிக்கு அமர்த்தியுள்ளன.
டிரம்புக்கு நெருக்கமானவராக இருக்கும் எலான் மஸ்குக்கு சொந்தமான டெஸ்லா நிறுவனம் முன்பை விட இரண்டு மடங்கு அதிகமாக ஹெச்1பி விசா அப்ரூவல் பெற்றுள்ளது. 2022இல் 337 பேர், 2023இல் 328 பேர் என இருந்த இந்த எண்ணிக்கை 2024ஆம் ஆண்டில் 742 என உயர்ந்துள்ளது.
குறிப்பாக டெஸ்லா நிறுவனம் தங்களுடைய உற்பத்தி, ஆய்வு மற்றும் மேம்பாட்டு பிரிவுகளில் அதிக ஊழியர்களை ஹெச்1பி விசா மூலம் வரவழைத்து பணிக்கு அமர்த்தியுள்ளது. அமெரிக்க டெக் நிறுவனங்களுக்கு தற்போது சீனாவுடன் கடுமையாக போட்டி போட வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. இத்தகைய சூழலில் ஹெச்1பி விசா கட்டுப்பாடுகள் அவற்றுக்கு புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளன.
மறுமுனையில் ஏப்ரல் 2ஆம் தேதிக்கு பின்பு டொனால்டு டிரம்ப் அரசின் ரெசிப்ரோக்கல் வரி விதிப்பு நடைமுறைக்கு வர உள்ளது. இது திட்டமிட்டப்படி செயல்படுத்தப்பட்டால் உலகளாவிய வர்த்தகம் பாதிக்கப்படும், இதனால் முதலீட்டு சந்தையில் பெரும் மாற்றம் உருவாகும் என கணிக்கப்பட்டு உள்ளது.
இந்த கணிப்புகள் சரியாக இருந்தால் ஏப்ரல் 2ஆம் தேதிக்கு பின்பு சர்வதேச சந்தையில் இருக்கும் முதலீடுகள் மீண்டும் அமெரிக்க பத்திர சந்தைக்கு திரும்பும், இதனால் டாலர் மதிப்பு உயரும். மறுமுனையில் கச்சா எண்ணெய் விலையில் உயர்வு பாதை துவங்கியிருக்கும் வேளையில் பணவீக்க உயர்வால் உலக நாடுகளின் பொருளாதாரம், வர்த்தகம் பாதிக்கப்படும். இப்படியிருக்கும் சூழ்நிலையில் பெரும் முதலீட்டாளருக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு தங்கம் மட்டுமே. இதனால் தங்கம் விலை தற்போதைய அளவை காட்டிலும் பெரிய அளவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications