ஈரானில் நாளுக்கு நாள் போர் தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக உலகிற்கே பெருமளவிலான கச்சா எண்ணெய் விநியோகம் தடைப்பட்டு போய் இருக்கிறது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் கச்சா எண்ணெய் வரத்து நின்று போய் அதன் வலியை மக்கள் அனுபவிக்க தொடங்கிவிட்டனர்.
சிலிண்டர் மற்றும் பெட்ரோல் , டீசல் உள்ளிட்டவற்றுக்கு ஆசிய நாடுகளில் தட்டுப்பாடு ஏற்பட தொடங்கி இருக்கிறது. இந்த சூழலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த 50 ஆண்டுகளில் முதன்முறையாக அமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுவதாக மெகா அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இந்தியாவின் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனம் பெரிய அளவில் முதலீடு செய்கிறது என்ற தகவலையும் அவர் வெளியிட்டு இருக்கிறார். தன்னுடைய ட்ரூத் சோசியல் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் டிரம்ப், ரிலையன்ஸ் நிறுவனத்தின் முதலீட்டோடு அமெரிக்காவின் டெக்ஸாஸில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது என கூறியிருக்கிறார்.
கடந்த 50 ஆண்டுகளில் அமெரிக்காவின் முதல் சுத்திகரிப்பு நிறுவனம் திறக்கப்பட போகிறது என்பதை அறிவிப்பதில் நான் பெருமைப்படுகிறேன் என்று குறிப்பிட்டுள்ள அவர் இந்த சாதனை இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் முதலீட்டின் உதவியோடு கிடைத்தது எனக் கூறியிருக்கிறார். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க 300 பில்லியன் டாலர் ஒப்பந்தம் என சுட்டிக்காட்டி இருக்கும் டிரம்ப் அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய ஒப்பந்தம் இது என தெரிவித்திருக்கிறார்.

மேலும் இது அமெரிக்க தொழிலாளர்களுக்கும் அமெரிக்காவின் எரிசக்தி துறைக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என கூறும் டிரம்ப் இந்தியாவில் உள்ள எங்கள் கூட்டாளிகளுக்கும் அந்த நாட்டின் மிகப்பெரிய தனியார் எரிசக்தி நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவு செய்திருக்கிறார்.
அமெரிக்கா அனுமதி நடைமுறைகளை எளிமைப்படுத்தியது மற்றும் வரிகளை குறைத்தது ஆகிய காரணங்களால் தான் பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள வர்த்தக ஒப்பந்தங்கள் மீண்டும் நம் நாட்டை நோக்கி ஈர்க்கப்பட்டுள்ளன என அவர் கூறியுள்ளார். இந்த புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமெரிக்க சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்ய புதிய உத்வேகத்தை அளிக்கும் என சுட்டிக்காட்டி இருக்கிறார்.
அமெரிக்காவின் எரிபொருட்கள் உற்பத்தியை பெருக்கும், பில்லியன் கணக்கான டாலர் மதிப்பிலான பொருளாதார பலன்களை ஈட்டி தரும் என கூறும் டிரம்ப் இந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் என உறுதி அளித்துள்ளார். எரிசக்தி துறையில் அமெரிக்கா என்றுமே முன்னிலையில் இருப்பதை இந்த ஆலை உறுதி செய்யும் என தெரிவித்துள்ளார்.
விரைவில் இந்த ஆலைக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு டிரம்பினை இரண்டு முறை நேரடியாக சந்தித்துள்ளார் முகேஷ் அம்பானி. டிரம்ப் பதவியேற்பு நிகழ்ச்சியில் அம்பானி தன்னுடைய மனைவி நீதா அம்பானியுடன் சென்று கலந்து கொண்டு நேரில் வாழ்த்து கூறினார். கடந்த ஆண்டு கூட தோஹாவிற்கு டிரம்ப் வருகை தந்த போது முகேஷ் அம்பானி அவரை நேரில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications