ஈரானில் இரண்டு வார காலமாக போர் நடைபெற்று வருகிறது. ஈரான் போர், அந்த ஒரு நாடு என இல்லாமல் சுற்றி இருக்கக்கூடிய வளைகுடா நாடுகளுக்கும் பரவி இருக்கிறது. பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கிய போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
ஈரான் போர் காரணமாக பல்வேறு நாடுகளிலும் எல்பிஜி, பெட்ரோல் உள்ளிட்டவற்றுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த போர் முடிவுக்கு வந்தால் மட்டுமே பிரச்சனை தீரும் என்பதால் கோடிக்கணக்கான மக்கள் போர் முடிவுக்கு வருவது எப்போது என்ற அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதலில் ஈரான் நாட்டு தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதனை அடுத்து அவருடைய மகன் மோஜ்தபா கமேனி புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அமெரிக்காவும் இஸ்ரேலும் இந்த மாற்றத்தை ஏற்க மறுக்கின்றன. ஒட்டுமொத்தமாகவே ஈரானில் ஆட்சி மாற்றம் நிகழ வேண்டும் என எதிர்பார்க்கின்றன. ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை.
இந்நிலையில் தான் கமேனியின் மகன் மோஜ்தபா கமேனி மீதும் இஸ்ரேலும் அமெரிக்காவும் இராணுவ தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் மோஜ்தபா கமேனி படுகாயம் அடைந்ததாகவும் ஒரு காலை இழந்து கோமா நிலையில் உள்ளதாகவும் பிரிட்டன் நாட்டை ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. ஈரான் நாட்டு அரசு ஊடகம் கூட கமேனி காயமடைந்து இருப்பதை உறுதி செய்தது.

இந்நிலையில் அமெரிக்க அரசாங்கம் மோஜ்தபா கமேனி குறித்து தகவல்களை வழங்குவோருக்கு ரொக்கப்பரிசினை அறிவித்துள்ளது. அமெரிக்க அரசின் ரிவார்ட்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் பதிவில் மோஜ்தபா கமேனி உள்ளிட்ட ஈரான் நாட்டு தலைவர்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு தெரிவியுங்கள், உங்களுக்கு பரிசு காத்திருக்கிறது என கூறியுள்ளது. அதில் குறிப்பிட்ட அந்த தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஈரான் புதிய தலைவர், ஈரான் அதிகாரிகள் , பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
இவர்கள் பற்றிய தகவல்களை வழங்கினால் 10 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 92 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஈரான் போர் தற்போதைக்கு முடிவுக்கு வராதோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கிடையே ஈரான் போர் எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டதற்கு அமெரிக்கா அதிபர் டிரம்ப் பதிலளித்திருக்கிறார்.
ஈரான் போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்கும் அவர் , அதை என்னால் உங்களிடம் சொல்ல இயலாது , அதாவது அது குறித்து எனக்கு ஒரு கணிப்பு உள்ளது என கூறியுள்ளார். எவ்வளவு காலம் அவசியமோ அவ்வளவு காலம் போர் நீடிக்கும் எனக் கூறியிருக்கும் டிரம்ப் ஈரான் முற்றிலுமாக சிதைக்கப்பட்டு விட்டது , அந்த நாடு மிக மோசமான நிலையில் உள்ளது என கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications