டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவி ஏற்றது முதலே இந்திய ஐடி துறைக்கும் ஐடி ஊழியர்களுக்கும் எதிரான நடவடிக்கைகளை எடுத்த வண்ணமே இருக்கிறார். இந்தியாவை சேர்ந்த பெரும்பாலான டெக்கிகள் அமெரிக்காவில் சென்று பணி புரிவதற்கு பயன்படுத்தக்கூடிய ஒரு விசா தான் ஹெச்1பி விசா. அதற்கும் தற்போது ஆப்பு வைத்திருக்கிறார்.
அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் வெளிநாட்டை சேர்ந்த திறன் மிகு ஊழியர்களை தங்கள் நாட்டில் பணிக்கு அமர்த்துவதற்கு ஹெச்1பி விசாவை தான் பயன்படுத்துகின்றன. அமெரிக்காவில் இந்த விசாவில் பணியாற்ற கூடியவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவை சேர்ந்த டெக்கிகள் தான். இந்த நிலையில் தான் ஹெச்1பி நடைமுறையில் பல்வேறு நிபந்தனைகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்திருக்கிறார் டிரம்ப்.

இதன்படி அமெரிக்க குடியுரிமை பெறாமல் அங்கே தங்கி பணிபுரியக்கூடிய வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கான ஹெச்1பி விசா கட்டணத்தை ஒரு லட்சம் டாலர் அளவுக்கு உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். ஒரு லட்சம் டாலர் என்பது இந்திய ரூபாயின் மதிப்பில் கிட்டத்தட்ட 88 லட்சம் ரூபாய் ஆகும். இனி இந்தியாவை சேர்ந்த ஊழியர்களை ஹெச்1பி விசாவில் அமெரிக்க நிறுவனங்கள் அமெரிக்காவில் பணியில் அமர்த்த வேண்டும் என்றால் அவர்கள் ஹெச்1பி விசாவுக்கான ஆண்டு கட்டணமாக மட்டுமே 88 லட்சம் ரூபாயை செலுத்த வேண்டியிருக்கும்.
சட்டவிரோத குடியேற்றங்களை தடுத்திட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விசா கட்டணத்தை அறிமுகம் செய்திருப்பதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது . இதற்கான ஆணையிலும் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டு இருக்கிறார். இதன் மூலம் திறன் வாய்ந்த நபர்கள் மட்டுமே அமெரிக்காவில் நுழைவார்கள் என்றும் நிறுவனங்கள் குறைந்த ஊதியத்திற்காக அமெரிக்கர்களுக்கு மாற்றாக வெளிநாட்டவர்களை ஹெச்1பி விசாவில் பணிக்கு அமர்த்துவது குறையும் என்றும் டிரம்ப் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

அமெரிக்க வர்த்தகத்துறை அமைச்சர் இது மிகச் சரியான ஒரு முடிவு என தெரிவித்திருக்கிறார் . இந்த நடைமுறையின் மூலம் ஹெச்1பி விசாவின் மூலம் அரசுக்கு ஒரு கணிசமான வருவாய் கிடைக்கும் என்றும் இது நாட்டின் கடன் சுமையை குறைக்கும் என்று அவர் தெரிவித்திருக்கிறார் . அமெரிக்காவில் இருக்கக்கூடிய 71% ஹெச்1பி பயனாளர்கள் இந்தியர்கள் தான். அவர்களில் பெரும்பாலானவர்கள் டெக் துறையில் தான் வேலை செய்கிறார்கள்.
இன்போசிஸ், விப்ரோ ,காக்னிசண்ட், டிசிஎஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் இந்தியாவை சேர்ந்த பொறியாளர்களையும் டெவலப்பர்களையும் அமெரிக்காவில் பணிக்கு அமர்த்த இந்த விசாவை தான் பயன்படுத்துகின்றன. அமேசான், மெடா , கூகுள் போன்ற நிறுவனங்களும் கூட இந்தியர்களை வேலையில் அமர்த்த இந்த விசாவை பயன்படுத்துகின்றன.
ஹெச்1பி விசாவுக்கான கட்டணத்தை நிறுவனங்களே ஏற்று கொள்ள வேண்டும் என்பதால் ஆண்டுக்கு ஒரு ஊழியருக்கு 88 லட்சம் ரூபாயை செலுத்துவது நிறுவனங்களுக்கு காஸ்ட்லியாக மாறும். எனவே ஹெச்1 பி விசாவுக்கு மாற்றாக அமெரிக்கர்களையே பணிக்கு அமர்த்த நிறுவனங்கள் முன் வரும்.இந்த நடவடிக்கையால் இந்திய ஐடி ஊழியர்கள் அமெரிக்காவிற்கு ஹெச்1பி விசாவில் செல்வது என்பது கணிசமான அளவு குறையும் இது நேரடியாகவே இந்தியா ஐடி நிறுவனங்களுக்கும் டெக்கிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது .


Click it and Unblock the Notifications