பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கி 23ஆவது நாளாக ஈரான் போர் நீடிக்கிறது. 4ஆவது வாரத்தை எட்டியுள்ள இந்த போர் இதுவரை 2000க்கும் அதிகமானவர்களின் உயிர்களை பறித்துள்ளது. இருந்தாலும் போர் முடிவுக்கு வருவதற்கான எந்த ஒரு அறிகுறியுமே தென்பட வில்லை. ஒவ்வொரு நாளும் போர் தீவிரம் அடைந்த வண்ணமே இருக்கிறது.
அமெரிக்காவும், இஸ்ரேலும் பிப்ரவரி 28ஆம் தேதி ஈரான் மீது திடீரென தாக்குதல் நடத்தி அந்நாட்டு தலைவர் அயத்துல்லா அலி கமேனியை கொலை செய்தன. வரிசையாக ஈரான் பாதுகாப்பு படை தலைவர், கமாண்டர் என முக்கிய புள்ளிகளை குறி வைத்து தாக்குதல் நடத்துகின்றன. இந்த போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஈரான் தீவிரமாக எதிர்வினையாற்றி வருகிறது.

ஈரான் போர் மேற்காசியா முழுவதுமே 24 மணி நேரமும் குண்டு சத்தங்களுக்கு இடையிலேயே மக்களை தவிக்க வைத்துள்ளது. இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானுக்கு 48 மணி நேர கெடு விதித்திருக்கிறார். போர் காரணமாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடி வைத்திருக்கிறது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கான கச்சா எண்ணெய், எல்பிஜி விநியோகம் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவில் எல்பிஜி கட்டுப்பாடும் இலங்கை .பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தான் எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் ஹார்முஸ் ஜலசந்தியை கப்பல் போக்குவரத்துக்கு முழுமையாக திறக்க வேண்டும், அடுத்த 48 மணி நேரத்திற்குள் இதனை செய்யவில்லை என்றால் ஈரானின் மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி அழிப்போம் என டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
இது குறித்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் டிரம்ப் வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஹார்முஸ் ஜலசந்தியை எவ்வித அச்சுறுத்தலும் இன்றி முழுமையாக திறந்து விடாவிட்டால், அமெரிக்கா ஈரானின் பல்வேறு மின் நிலையங்களையும் தாக்கி அழிக்கும் , முதலில் நாட்டின் மிகப்பெரிய மின் நிலையத்தை அழிப்போம் என குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கு ஈரான் தரப்பிலும் பதில் தரப்பட்டுள்ளது. ஈரான் ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி ஈரான் நாட்டு ஒருங்கிணைந்த படைகள் குழுவின் தலைவர் அமெரிக்கா ஈரானின் எரிசக்தி அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தினால் அமெரிக்காவுக்கு சொந்தமான அனைத்து எரிசக்தி உள் கட்டமைப்புகளையும் நாங்கள் அழிப்போம் என பதிலடி தந்திருக்கிறார்.
இதற்கிடையே இந்த போரில் முதன்முறையாக ஈரான் நீண்ட தூரம் சென்று தாக்கி அழிக்கக்கூடிய ஏவுகணைகளை பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறது. ஈரானில் இருந்து 4000 கிலோமீட்டர் தூரம் வரை சென்று இலக்குகளை அழிக்கும் திறன் கொண்ட இரண்டு ஏவுகணைகளை ஈரான் வீசி இருப்பதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் தொடங்கியதிலிருந்து முதன்முறையாக ஈரான் இப்படி நீண்ட தூரம் சென்று தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறது என இஸ்ரேல் அரசு எச்சரித்துள்ளது. இந்த ஏவுகணைகள் லண்டன், பாரீஸ், பெர்லின் நகரங்கள் வரை சென்று இலக்குகளை தாக்கும் திறன் கொண்டதாம்.


Click it and Unblock the Notifications