அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது நடத்திய கூட்டு ராணுவ நடவடிக்கைதான் உலகம் முழுவதுமே பேசு பொருளாக மாறி இருக்கிறது. திடீரென இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் ஈரானின் பல்வேறு பகுதிகளை குறி வைத்து சனிக்கிழமை தொடர்ச்சியாக குண்டு மழை பொழிந்தன.
அமெரிக்காவின் இந்த திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத ஈரான் பதிலுக்கு வளைகுடா நாடுகளில் இருக்கும் அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் இஸ்ரேல் மீதும் வான்வெளி தாக்குதல்களை நடத்தியது. இந்த சூழலில் தான் இஸ்ரேலும் அமெரிக்காவும் நடத்திய கூட்டு ராணுவ நடவடிக்கையில் ஈரானின் தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டிருக்கிறார். இதனால் இன்னும் போர் பதற்றம் அதிகமாகியுள்ளது.

இதற்கிடையே அமெரிக்கா ஈரான் மீதான தாக்குதலுக்கு ஏஐ கருவிகளை பயன்படுத்தி இருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் ஆந்திராபிக் நிறுவனத்தின் கிளாட் ஏஐ கருவிகளை பயன்படுத்தி வந்தது. இதற்காக பென்டகனுக்கு ஆந்திராபிக் நிறுவனத்திற்கும் சுமார் 200 மில்லியன் டாலர் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆந்திராபிக் நிறுவனம் பெண்டகன் விதித்த கட்டுப்பாடுகளை ஏற்க மறுப்பதாக கூறி அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
கிளாட் ஏஐ கருவிகளை அமெரிக்க அரசும் ராணுவமும் பயன்படுத்த கூடாது என டிரம்ப் கடந்த வாரம் அறிவித்த நிலையில் ஈரான் தாக்குதலில் இந்த ஏஐ மாடலை முக்கிய அங்கம் வகித்தது தெரிய வந்துள்ளது. பொதுவாக அமெரிக்க ராணுவ கமாண்டர்கள் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளவர்கள் ஏஐ கருவிகளை பல செயல்களுக்கும் பயன்படுத்துகிறார்கள்.

மிக முக்கியமாக உளவுத்துறை அறிக்கைகளை மதிப்பீடு செய்வது, இலக்குகளை அடையாளம் காண்பது மற்றும் போர்கள காட்சிகளை உருவகப்படுத்துவது போன்ற பணிகளுக்கு ஏஐ கருவிகளை பயன்படுத்துகின்றன. ஈரானுக்கு எதிரான தற்போதைய நடவடிக்கையிலும் ஆந்திராபிக் நிறுவனத்தின் கிளாட் ஏஐ கருவியை பயன்படுத்தி உளவு தகவல்களை சேகரித்து தாக்குதலை திட்டமிட்டு இருக்கிறார்கள்.
அமேசான் வெப் சர்வீஸ் சேவைகளோடு இணைந்து அமெரிக்காவின் மிக முக்கியமான ராணுவ நடவடிக்கைகளில் பயன்படுத்துவதற்கு அங்கீகாரம் பெற்ற ஒரே கருவி ஆந்திராபிக் நிறுவனத்தின் கிளாட் கருவிதான். அண்மையில் அந்த நிறுவனத்திற்கும் அமெரிக்க ராணுவ தலைமையகத்திற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இருந்தாலும் முழுமையாக அதன் பயன்பாட்டை நீக்குவதற்கு பல மாதங்கள் ஆகும் என ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக தான் கிளாட் ஏஐ பயன்படுத்த கூடாது என்ற உத்தரவுக்கு பின்னரும் ஈரான் ராணுவ நடவடிக்கையில் அது பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னதாக அமெரிக்க ராணுவம் வெனிசுலாவில் நடத்திய ராணுவ நடவடிக்கையிலும் கிளாட் ஏஐ கருவிகளை பயன்படுத்தி இருப்பது தெரிய வந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications