ஈரான் வசம் அணு ஆயுதங்கள் இருப்பது உலக நாடுகளுக்கு எல்லாம் ஆபத்தானது என கூறி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுத்தன. பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கிய போர் ஆயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கி விட்டது.
ஈரான் முக்கிய எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை மூடி போரில் தன்னுடைய பலத்தை காட்டியது. இதனால் பல நாடுகளிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. இதற்கிடையில் தான் கடந்த வாரம் இரு தரப்பு போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது.

அமெரிக்காவும் ஈரானும் பாகிஸ்தானில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தின. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்து இருக்கிறது. இதன் காரணமாக கடும் கோபம் அடைந்து இருக்கக்கூடிய அமெரிக்கா மீண்டும் தாக்குதல் தொடங்கப்படும் என அறிவித்திருக்கிறது.
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 20 மணி நேரமாக அமைதிப் பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால் ஈரான் அணு ஆயுதங்களை மீண்டும் உருவாக்க மாட்டோம் என உறுதிமொழி தர மறுத்ததால் இந்த பேச்சுவார்த்தை முறிந்ததாக அமெரிக்கா துணை அதிபர் ஜே.டி,வான்ஸ் அறிவித்தார்.
இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் கடும் ஆத்திரத்தில் இருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நுழையும் மற்றும் வெளியேறும் அனைத்து கப்பல்களையும் அமெரிக்க கடற்படை முற்றுகையிடும் என அறிவித்திருக்கிறார். ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கவில்லை, மிக முக்கியமான அணுசக்தி விவகாரத்தில் ஈரான் இணக்கம் காட்டவில்லை எனவே உலகின் மிகச்சிறந்த அமெரிக்க கடற்படை ஹார்முஸில் நுழையும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் அனைத்து கப்பல்களையும் முற்றுகையிடும் பணி நாளை காலை 10 மணி முதல் தொடங்கும் என அறிவித்திருக்கிறார்.
மேலும் அமெரிக்க கடற்படை ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் ராணுவம் வைத்து இருக்கக்கூடிய அனைத்து கண்ணிவெடிகளையும் அழிக்கும் என தெரிவித்திருக்கிறார். ஈரானில் இருக்கக்கூடிய கொஞ்ச நஞ்சத்தையும் அழிக்க அமெரிக்க ராணுவம் தயாராக இருக்கிறது என டிரம்ப் கூறியிருக்கிறார். இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரான் போர் தொடர்கிறது என அறிவித்திருக்கிறார், தங்களின் எதிரி நாடு உயிர் வாழ போராடி வருகிறது என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஈரான் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நட்பு நாடுகளும் கை கொடுக்க முன்வராமல் இருப்பதால் அமெரிக்க அரசு சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்க ஆயத்தமாவதாக சொல்லப்படுகிறது. இதனால் இன்னும் சில வாரங்களுக்கு ஈரானில் அமைதி ஏற்படுவதற்கான வாய்ப்பே இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.
ஈரான் போர் நீடிப்பதும் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் பயணிக்காமல் இருப்பதும் இந்தியா போன்ற நாடுகளுக்கு நல்லதல்ல. இதனால் எரிபொருள், உரம் உள்ளிட்ட தட்டுப்பாடுகளையும் விலைவாசி உயர்வு போன்ற சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.


Click it and Unblock the Notifications