அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை பெடரல் ரிசர்வ் வங்கியின் புதிய தலைவராக கெவின் வார்ஷ்-ஐ நியமனம் செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். டிரம்ப் - ஜெரோம் பவல்-க்கு மத்தியிலான நீண்ட கால போராட்டத்திற்கு பின்பு பெட் தலைவராக புதிய நபரை தேர்வு செய்யப்பட்டு உள்ளது அமெரிக்க அரசு. இவருடைய நியமனம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும்.
ஜெரோம் பவல் பதவி காலம் அடுத்த சில மாதத்தில் முடியும் வேளையில், அவருக்கு பதிலாக கெவின் வார்ஷ் நியமினம் செய்ய டிரம்ப் முடிவு செய்துள்ளார். கடந்த ஐந்து மாதங்களாக நடைபெற்று வந்த தேர்வு செயல்முறைக்கு இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.

டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். "கெவின் வார்ஷை நான் நீண்ட காலமாக அறிவேன். அவர் சிறந்த பெட் தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படுவார்" என்று பாராட்டினார்.
டிரம்ப் 2017இல் பவல்-ஐ நியமித்தபோது இருந்தே அவரை கடுமையாக விமர்சித்து வந்தார். வட்டி விகிதங்களை உடனடியாக குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து அழுத்தம் கொடுத்தார். 2025இன் இறுதியில் பெட் மூன்று முறை வட்டி குறைத்தாலும், டிரம்ப் தனது விமர்சனத்தை நிறுத்தவில்லை.
பெட் தலைமையக கட்டிடத்தின் புதுப்பிப்பு செலவு அதிகமானது என்றும் குற்றம்சாட்டி வழக்கு தொடுத்தார். இந்த நிலையில் புதிய நியமனம் எப்படி இருக்கும் என்பதை விட கெவின் வார்ஷ் யார்..? அவர் டிரம்ப்-க்கு சாதகமாக செயல்படுவாரா என்ற கேள்வி எழுப்பட்டது.
55 வயது நிரம்பிய கெவின் வார்ஷ் 2006 முதல் 2011 வரை ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் கவர்னராக பணியாற்றியவர். அவருக்கு பெட் வங்கியில் அனுபவம் உள்ளது. டிரம்ப் சொல்வதை கேட்டுக்கொண்டு தலையை ஆட்டும் நபர் இவர் இல்லை என வால் ஸ்ட்ரீட்-ல் கருத்து நிலவுகிறது. இந்த நியமனம் ஃபெட் வங்கியின் எதிர்கால கொள்கைகளுக்கு புதிய திசையை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பஹ்ன்சென் குழுமத்தின் முதலீட்டு அதிகாரி டேவிட் பஹ்ன்சென் "கெவின் சந்தையில் மரியாதையை பெற்றவர்" என்று CNBCயில் தெரிவித்தார். இந்த நியமனம் சந்தையில் பெரிய தடுமாற்றத்தை ஏற்படுத்தாது, மாறாக நிலையாக கொள்கை இருக்கும் என்பதை நம்பி தொடர்ந்து சீராக இயங்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்த மாற்றம் மிகவும் சவாலான காலத்தில் நடைபெறுகிறது. அமெரிக்காவில் பணவீக்கம் இலக்கை விட அதிகமாக உள்ளது. அரசு கடன் அதிகரித்து வருகிறது. மத்திய வங்கி கொள்கைகள் மீது அரசியல் அழுத்தம் அதிகரித்துள்ளது. டிரம்ப் ஆட்சியில் பெட் சுதந்திரம் கேள்விக்குள்ளாகியுள்ளது. புதிய தலைவருக்கு பணவீக்க கட்டுப்பாடு, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் சமநிலை காப்பது பெரும் சவாலாக இருக்கும்.
இந்த நியமனம் செனட் ஒப்புதலுக்கு பின்பே நடைமுறைப்படுத்தப்படும். அதுவரை பவல் தொடர்ந்து பதவியில் இருப்பார். அவரது பதவிக்காலம் மே மாதத்தில் முடிவடைகிறது.
டிரம்ப் ஆட்சியின் பொருளாதார கொள்கைகள் இப்போது தெளிவடையும். சாதாரண மக்களுக்கு வட்டி விகித மாற்றங்கள் கடன், சேமிப்பு, விலைவாசி ஆகியவற்றை பாதிக்கும். உலக சந்தைகளும் இதை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.


Click it and Unblock the Notifications