அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் தொடர்ச்சியாக ஹெச்1பி விசாவில் பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. தற்போது ஹெச்1பி விசாவில் அமெரிக்காவில் இருக்கும் வெளிநாட்டவர்களுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும் வகையிலான மாற்றத்தை கொண்டு வர சட்ட ரீதியாக டிரம்ப் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
பொதுவாக அமெரிக்காவில் ஹெச்1பி விசாவில் சென்றவர்கள் வேலை இழக்கும் போது புதிய வேலையை தேட அவர்களுக்கு 60 நாட்கள் அவகாசம் (Grace Period) வழங்கப்படும். அதாவது 2 மாத காலம், இந்த 2 மாதத்திற்குள் அவர்கள் அவர்கள் வேலை தேடி கொண்டால் தொடர்ந்து இந்த விசாவில் அமெரிக்காவில் வேலை செய்ய முடியும். ஹெச்1பி விசாவில் அமெரிக்கா சென்ற இந்தியர்கள் உட்பட பல வெளிநாட்டவர்களுக்கும் இது சாதகமான ஒன்றாக இருந்தது.

இந்நிலையில் டிரம்ப் நிர்வாகம் 60 நாட்கள் அவகாசத்தை முற்றிலுமாக ரத்து செய்ய புதிய விதிமுறையை முன்மொழிந்துள்ளது. அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, அமெரிக்காவில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பிற வெளிநாட்டு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
60 நாள் அவகாசத்தை நீக்குதல் (Eliminating the Discretionary 60-day Grace Period) என்ற தலைப்பில் இந்த புதிய விதி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஹெச்1பி மற்றும் இதர தற்காலிக பணி விசாக்களில் உள்ளவர்கள் தங்களின் வேலையை இழந்தால், அந்த விநாடியே அவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டியிருக்கும்.அமெரிக்காவில் தங்குவதற்கு வேறு தனி அனுமதி ஏதேனும் இருந்தால் மட்டுமே அவர்கள் அமெரிக்காவில் தொடர முடியும்.
ஏற்கனவே டெக் நிறுவனங்கள் திடீர் திடீரென ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இத்தகைய சூழலில் வேலை இழந்தால் உடனே வெளியேற வேண்டும் என்ற விதி நடைமுறைக்கு வந்தால் பலரது அமெரிக்க கனவு சிதைந்து போகும்.
கடந்த 2017ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட விதிகளின்படி, ஹெச்1பி மற்றும் பிற தற்காலிக விசாக்களில் உள்ளவர்கள் திடீரென வேலை இழந்தாலோ அல்லது வேலையை விட்டாலோ, அவர்கள் புதிய வேலையை தேடிக்கொள்ளவோ அல்லது அமெரிக்காவிலிருந்து தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்துகொள்ளவோ அதிகபட்சமாக 60 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு வந்தது.
இந்த அவகாசக் காலத்தில் அவர்கள் தங்கள் வீடுகளை காலி செய்வது, குழந்தைகளின் பள்ளிக்கூட மாற்றங்களை செய்வது போன்ற அவசியமான வேலைகளை செய்ய முடிந்தது. ஆனால், தற்போது கொண்டுவரப்பட இருக்கும் இந்த முன்மொழிவு மூலம் இந்த சலுகை முற்றிலும் பறிக்கப்படுகிறது.
முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ் , எச்சிஎல் டெக், அமேசான், கூகுள் , மைக்ரோசாப்ட் போன்ற பல நிறுவனங்கள் இந்தியா மற்றும் சீனாவிலிருந்து பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை ஹெச்1பி விசா மூலம் வேலைக்கு அமர்த்துகின்றன. இந்த விசாவில் அமெரிக்காவில் வேலை செய்யும் நபர்களில் சுமார் 70% பேர் இந்தியர்களே. அந்த வகையில் இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்தால் இந்திய டெக் ஊழியர்களுக்கு தான் சிக்கல்.
ஏஐ வருகை மற்றும் பல்வேறு காரணங்களால் நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்து வருகின்றன. இந்நிலையில், வேலையை இழக்கும் ஒருவருக்கு இருந்த அந்த 2 மாத பாதுகாப்பு வலையும் இல்லாமல் போனால், அவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நெருக்கடி ஏற்படும். வேலை இழக்கும் வெளிநாட்டினருக்கு பதிலாக, அந்த காலி பணியிடங்களை அமெரிக்காவில் உள்ள தகுதியான உள்ளூர் பணியாளர்களை கொண்டு நிரப்ப நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்பதே இந்த கடுமையான விதிகளுக்கு பின்னால் உள்ள நோக்கம் என சொல்லப்படுகிறது.
இந்த விதிமுறையானது வெளியிடப்பட்டு பொதுமக்களின் கருத்துக்கள் கேட்கப்படும். அடுத்த 60 நாட்களுக்குள் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் கருத்துக்களை பெற்ற பின்னரே இந்த விதி இறுதி செய்யப்பட்டு சட்டமாக்கப்படும்.


Click it and Unblock the Notifications


