ஏஐ கருவிகள் அரசுக்கு சொந்தமான இணையதளங்களை ஊடுறுவுவது ரகசிய தகவல்களை அனுமதியில்லாமல் சென்று படிப்பது என அண்மை காலமாக முரண்பட்ட வேலைகளை செய்து வருகின்றன. இதனால் ஏஐ ஆய்வுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என குரல்கள் எழுந்து வரும் நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.
ஏஐ துறையில் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ உருவாக்கிய அதிநவீன ஏஐ மாடல்கள், அமெரிக்க அரசாங்கத்திற்கு சொந்தமான வலைத்தளங்களில் இருந்த தரவுகளை அணுகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்புப் பிரிவு மற்றும் பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷன் (SEC) ஆகியவற்றுக்கு சொந்தமான இணையதள தரவுகளை இந்த ஏஐ அமைப்புகள் ஆய்வு செய்துள்ளன.

ப்ளூம்பெர்க் நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியின் படி ஓபன்ஏஐ நிறுவனத்தின் ஏஜென்டிக் ஏஐ அமைப்புகள் SEC.gov அதாவது அமெரிக்கப் பங்கு சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தின் தளம், Investor.gov என்ற முதலீட்டாளர்களுக்கான தளம், Census.gov என்ற அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்புப் பிரிவின் பொது தரவுகள் ஆகியவற்றை ஊடுறுவியுள்ளது.
இவை அனைத்தும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ஆன்லைனில் பகிரப்பட்டவை என்றாலும், ஓபன்ஏஐ-யின் ஏஐ மாடல்கள் இவற்றை தங்களது தொழில்நுட்பப் பயிற்சிக்காகவும் மதிப்பீடுகளுக்காகவும் பயன்படுத்தியுள்ளன என ஓபன் ஏஐ தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
தங்கள் நிறுவனத்தின் அமைப்புகளில் எதிர்பாராத அல்லது ஒழுங்கமைவற்ற முறையில் இயங்கிய மாடல்களின் செயல்பாடு குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும், எந்தெந்த அமைப்புகளின் வலைத்தளங்கள் இந்த ஏஐ வருகையால் பாதிக்கப்பட்டுள்ளனவோ, அந்த நிறுவனங்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தகவல் தெரிவிக்கும் பணியும் நடைபெற்று வருவதாகவும் விளக்கம் தந்துள்ளது.
மேலும் ஹேக்கிங் செய்து ஏஐ மாடல்கள் அமெரிக்க அரசின் தளங்களை அணுகவில்லை என விளக்கம் தந்துள்ளது. தங்கள் மதிப்பீட்டு பணிகளின்போது, சில அரசாங்க வலைத்தளங்களை தங்களது மாடல்கள் நம்பகமான பொது தகவல்களின் ஆதாரமாக அடிக்கடி நாடுகின்றன. இது வழக்கமான ஆராய்ச்சி பணிகளுக்காகவே நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
முன்னதாக ஆஸ்திரேலிய அரசின் இணையதளங்கள் ஓபன் ஏஐ உருவ்பாக்கிய ஏஐ அமைப்புகள் ஹேக் செய்தன என அந்நாட்டு பிரதமர் குற்றம்சாட்டி இருந்தார். இது குறித்து ஓபன் ஏஐ நிறுவனம் 3 மாதங்கள் கழித்து தான் தங்களுக்கு தகவலே தெரிவித்தது என்றும் கடுமையாக சாடி இருந்தார். ஏற்கனவே ஓபன் ஏஐ உருவாக்கிய ஏஐ ஏஜெண்டுகள் தானாகவே குழு அமைத்து சதி வேலைகளை செய்து ஒரு தளத்தை ஹேக் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மனித தலையீடு இல்லாமல் தானாகவே இயங்கக்கூடிய நவீன செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை எவ்வாறு கண்காணிப்பது மற்றும் கட்டுப்படுத்துவது என்பது குறித்த விவாதங்களை உலகளவில் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளன. இத்தகைய ஆய்வுகளுக்கே தடை விதிக்க வேண்டும் என பலரும் கோரும் நிலையில் டிரம்ப் அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications


