அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கை தேர்ந்த ஒரு தொழிலதிபர். அதிபராக பதவி வகித்தாலும் தன்னுடைய தொழில்களையும் அவர் திறம்பட கவனிக்கிறார். ஆனால் தன்னுடைய பதவியை தவறாக பயன்படுத்தி அவர் லாபம் பார்க்கிறாரா என்பது பூதாகரமாக வெடித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2026 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 3,700-க்கும் மேற்பட்ட பங்குச் சந்தை வர்த்தகங்களை (Stock trades) மேற்கொண்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி, அமெரிக்க பங்குச்சந்தை வல்லுநர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அமெரிக்க அரசாங்கத்தின் Office of Government Ethics வெளியிட்ட நிதி அறிக்கையின் மூலம் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன.

மூன்று மாதங்களில் 3,700 வர்த்தகங்கள் என்பது, ஒரு நாளைக்கு சராசரியாக 40-க்கும் மேற்பட்ட பங்குகளை வாங்குவது அல்லது விற்பது ஆகும். நிதித்துறை வல்லுநர்கள் ஒரு நாட்டின் அதிபர் இவ்வளவு தீவிரமாகப் பங்குச் சந்தையில் ஈடுபடுவது வரலாறு காணாத ஒன்று என்கின்றனர். இது ஒரு தனிநபரின் கணக்கு போல இல்லாமல், Algo trading மூலம் இயங்கும் ஒரு பெரிய "ஹெட்ஜ் ஃபண்ட்" (Hedge Fund) நிறுவனம் செய்யும் வர்த்தகம் போல இருப்பதாக வால் ஸ்ட்ரீட் நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் இந்த வர்த்தகங்களின் மொத்த மதிப்பு 220 மில்லியன் டாலர் முதல் 750 மில்லியன் டாலர் வரை (இந்திய மதிப்பில் சுமார் ₹1,800 கோடி முதல் ₹6,200 கோடி வரை) இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக Nvidia, Microsoft, Amazon, Meta, Boeing, Apple போன்ற உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்புத் துறை நிறுவனங்களின் பங்குகளையே டிரம்ப் வாங்கியுள்ளார்.
Conflict of Interest மற்றும் Insider Trading சந்தேகங்கள் டிரம்ப் மீது முன் வைக்கப்படுகின்றன. அதாவது அதிபர் பதவியில் உத்தரவுகளை பிறப்பிக்கும் அதிகாரம் கொண்டு அதனை தவறாக பயன்படுத்தினாரா என்ற் கேள்வி எழுகிறது. ஏனெனில் அதிபர் எடுக்கும் முடிவுகள், வரிக் கொள்கைகள் மற்றும் சர்வதேச ஒப்பந்தங்கள் உலகப் பொருளாதாரத்தையே மாற்றக்கூடியவை. டிரம்ப் வாங்கிய அல்லது விற்ற சில நிறுவனங்களின் பங்குகள், அவரது அரசாங்கம் எடுத்த முக்கிய முடிவுகளோடு ஒத்துப்போகின்றன என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Nvidia & AMD நிறுவனங்களின் பங்குகளை டிரம்ப் வாங்கிய சில நாட்களிலேயே, அமெரிக்க வர்த்தக அமைச்சகம் இந்த நிறுவனங்களின் சிப்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கியது. இதனால் நிறுவனங்களின் பங்கு மதிப்பு உயர்ந்தது. Palantir Technologies பங்குகளை டிரம்ப் வாங்கிய சில வாரங்களில், அந்நிறுவனத்திற்கு அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையிடமிருந்து 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள பிரம்மாண்ட ஒப்பந்தம் கிடைத்தது. ஒரு அதிபராக நாட்டின் ரகசிய மற்றும் முக்கியமான கொள்கை முடிவுகள் முன்கூட்டியே தெரிந்திருப்பதால், அதைத் தனது சொந்த லாபத்திற்காகப் பயன்படுத்தினாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு வெள்ளை மாளிகை அதிகாரிகளும், டிரம்பின் நிறுவனமும் விளக்கம் அளித்துள்ளன. இந்த வர்த்தகங்களை டிரம்ப்போ அல்லது அவரது குடும்பத்தினரோ நேரடியாகச் செய்யவில்லை. அவரது சொத்துக்கள் அனைத்தும் மூன்றாம் தரப்பு நிதி நிறுவனங்களால் (Third-party financial institutions) முற்றிலும் தானியங்கி முறையில் (Automated Systems) நிர்வகிக்கப்படுகின்றன. எந்தப் பங்குகளை வாங்க வேண்டும், விற்க வேண்டும் என்பதில் டிரம்ப்பிற்கு எந்தவிதத் தொடர்போ அல்லது முன்கூட்டிய தகவலோ கிடையாது என்று அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications

