அமெரிக்காவின் 50 சதவீத வரி உயர்வால் ஏற்றுமதியை சார்ந்து இருக்கும் நிறுவனங்களின் வர்த்தகம், வேலைவாய்ப்பு, வருமானம் ஆகியவை பெரிய அளவில் பாதிக்கும் என்பதால் இந்திய ஏற்றுமதியாளர்கள் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியிடம் அடுத்தடுத்து சரமாரியாக கோரிக்கை வைத்து வருகிறது.
சீனா பிளஸ் ஒன் கொள்கை மூலம் இந்திய நிறுவனங்கள் பெரிய அளவிலான வர்த்தகத்தை பெற்று வந்த நிலையில் தற்போது டிரம்ப்-ன் 50 சதவீத வரியால் மொத்தத்தையும் இழக்க வேண்டிய அவல நிலை உருவாகியுள்ளது. இந்த மோசமான சூழலில் ஏற்றுமதியாளர்கள் தங்கள் வணிகத்தை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசிடம் இருந்தும், ரிசர்வ் வங்கியிடம் இருந்தும் எதிர்பார்க்கின்றனர்.

இந்திய தொழில்துறையின் கோரிக்கைப் பட்டியலில் முக்கியமானதாக இருப்பது ஏற்றுமதி நிறுவனங்கள் வாங்கிய கடன் திருப்பிச் செலுத்துவில் தளர்த்த வேண்டும் என்பது தான். இதை தொடர்ந்து ஏற்றுமதி பாதிக்கப்பட்ட துறை நிறுவனங்களுக்கு அரசு உத்தரவாதத்துடன் கடன்கள், வட்டி சலுகைகள், ஊழியர்களின் பிராவிடண்ட் ஃபண்ட் (பிஎஃப்) மற்றும் ஊழியர்கள் மாநில காப்பீட்டு கழகம் (ESIC) ஆகியவற்றுக்கு உதவி தேவை என தெரித்துள்ளனர்.
இந்த நடவடிக்கைகள் மூலம் குறைந்த ஆர்டர்கள் மற்றும் நீண்ட கால தொகை செலுத்தல் சுழற்சியால் ஏற்படும் பணப்புழக்க பிரச்சினைகளை சமாளிக்க உதவும். இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு (எஃப்ஐஇஓ) ஒரு ஆண்டு காலத்துக்கு முதல் மற்றும் வட்டி திருப்பிச் செலுத்தலுக்கு இடைநிறுத்தம் கோரியுள்ளது. இது, புதிய சந்தைகளை விரிவுபடுத்தவும், வணிகத்தை மறுசீரமைக்கவும் வாய்ப்பளிக்கும் என அவர்கள் கருதுகின்றனர்.
கடனை திருப்பி செலுத்துவதில் கால அவகாசம்
நகைகள் மற்றும் ஜுவல்லரி ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் தலைவர் கிரித் பான்சாலி, இந்த வரி உயர்வை ஒரு பூகம்பமாக குறிப்பிடுகிறார். இது தொழிலாளர்களை பெரிதும் பாதிக்கும் என அவர் கூறியுள்ளார். பான்சாலி ஆர்பிஐ உடனான கூட்டத்தில் ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களின் கடனை திருப்பி செலுத்துவதில் கால நீட்டிப்பு அளிக்கவும் வங்கிகளிடம் தளர்வு கோரப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
ஒரு வருட விலக்கு
எஃப்ஐஇஓ தலைவர் எஸ்சி ரல்ஹான் கூறுகையில் இந்த 50 சதவீத வரியால் சில குறிப்பிட்ட துறையில் நிறுவன மூடல்கள் மற்றும் வேலைவாய்ப்பு இழப்பு போன்ற நெருக்கடியை எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ளார். அமெரிக்க சந்தைக்காக உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை உள்நாட்டு சந்தையில் விற்பது சாத்தியமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
இத்தகைய மோசமான சூழ்நிலையை சமாளிக்க ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஒரு வருட காலத்திற்கு கடன் தொகை மற்றும் வட்டி தொகையை செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications