டொனால்டு டிரம்ப அடுத்தடுத்து 2 முறை 25 சதவீத வரி விதித்து இந்திய பொருட்களுக்கு தற்போது சுமார் 50 சதவீத வரியை விதித்தது மூலம் இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கும் என கணக்கிடப்பட்டு உள்ளது. அமெரிக்கா இந்தியா மத்தியிலான சரக்கு வர்த்தகத்தில் சுமார் 40 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தக பற்றாக்குறை இருக்கும் காரணத்தாலேயே டிரம்ப் இந்திய பொருட்கள் மீது 25 சதவீத வரியை விதித்தார். ஆனால் சேவை துறையில் இந்தியாவுடனான வர்த்தகத்தில் அமெரிக்கா உபரி வர்த்தகத்தை கொண்டு இருக்கும் காரணத்தால் சேவை துறையின் மீது எவ்விதமான வரியும் விதிக்கவில்லை.
இதனால் ஐடி சேவை துறை டிரம்ப் விதித்த 50 சதவீத வரி மூலம் எவ்விதமான பாதிப்பும் இல்லை என கூறப்பட்டாலும், இந்த வரி ஐடி துறையை மறைமுகமாக பெரும் பாதிப்பை எதிர்கொள்ள போகிறது. 280 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்திய தகவல் தொழில்நுட்ப (ஐடி) துறைக்கு இந்த 50 சதவீத வரி மூலம் பல மறைமுக தாக்கங்கள் ஏற்படும் என வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்திய ஐடி, BPO மற்றும் டிஜிட்டல் சேவைகள், அமெரிக்காவின் புதிய வரிகளால் நேரடியாக பாதிக்கப்படாது, ஆனால் இந்த வரி மூலம் இரண்டாம் நிலை பாதிப்புகள் ஏற்படுவதை கவனிக்கப்பட வேண்டும் என என்று எவரஸ்ட் குழுமத்தின் பார்னர் ரோகிதாஷ்வா அகர்வால் தெரிவித்துள்ளார்.
இதற்கு முக்கிய காரணம், டிரம்ப் சுமார் 60 நாடுகள் மீது ரெசிப்ரோக்கல் வரிகளை விதித்துள்ளார். இந்த வரியால் பாதிக்கப்பட்ட துறைகளின் வாடிக்கையாளர்களின் வர்த்தகத்தில் செலவுகள் அதிகரிக்கும். இதனால் அவர்களின் ஐடி பட்ஜெட் பாதிக்கப்படும், எனவே அதிகமாக டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன் திட்டங்களை செயல்படுத்துவதில் பாதிக்கலாம்.
இதனால் இந்திய ஐடி சேவை நிறுவனங்களுக்கு கிடைக்கும் புதிய திட்டங்கள் எண்ணிக்கையும், அளவும், மதிப்பும் பாதிக்கலாம். மேலும், வன்பொருள், உள்கட்டமைப்பு இறக்குமதி செலவு உயரும் காரணத்தால், வெளிநாட்டு வர்த்தகத்தின் இயக்க செலவுகளும் அதிகரிக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

ஐஎஸ்ஜி நிறுவனத்தின் முதன்மை ஆய்வாளர் நம்ராதா தர்ஷன் கூறுகையில், ஐடி சேவை சந்தையில் உடனடியாக பாதிப்பு இல்லாவிட்டாலும், வாடிக்கையாளர் செலவுகள் குறைவடைவது மூலம் புதிய வர்த்தகம் கிடைப்பதில் தாமதமாகலாம் என்று கூறினார். இது இந்திய ஐடி சேவை துறைக்கு மறைமுக தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனால், இந்தியாவில் இருக்கும் ஐடி நிறுவனங்களும், GCC நிறுவனங்களும் வர்த்தக இயக்கத்திலும், ஊழியர்கள் பணியில் அமர்த்துவதிலும் பாதிப்புகளை எதிர்கொள்ள வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
அமெரிக்க அரசின் DOGE திட்டத்தின் கீழ் ஐடி செலவுகள் குறைக்கப்பட்டுள்ளதால், இந்த சூழல் மேலும் சிக்கலாகியுள்ளது. இதன் காரணமாக, அக்சென்ச்சர் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றன.
இந்த மாற்றங்கள், இந்திய ஐடி துறையின் வாடிக்கையாளர் திட்டங்களை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய அவசியத்தை உருவாக்கியுள்ளன.


Click it and Unblock the Notifications