அமெரிக்க குடிமகன்களாக அல்லாத பெற்றோர்-க்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பால் கிடைத்த அமெரிக்க குடியுரிமை இனி கிடைக்காது என்ற அதிபர் டிரம்பின் உத்தரவு பல்வேறு வெளிநாட்டு குடும்பங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் செட்டிலாக வேண்டும் என விரும்பி பணி நிமித்தமாக அங்கே தங்கி இருக்கக்கூடிய இந்திய தம்பதிகள் பலரும் என்ன செய்வது என தெரியாமல் திகைத்து நிற்கின்றனர்.
அமெரிக்காவில் வேலை நிமித்தமாக ஹெச்1பி விசா மூலம் செல்லக்கூடிய பெரும்பாலான இந்திய தம்பதிகள் கிரீன் கார்டுக்கு விண்ணப்பம் செய்து நிரந்தர குடியுரிமை பெற முயற்சி செய்கின்றனர். அதே வேளையில் இவர்களுக்கு அமெரிக்காவில் குழந்தை பிறந்தால், இதுநாள் வரை அமெரிக்காவில் பிறந்த ஒரே காரணத்திற்காக அந்த குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை கிடைத்துவிடும் . ஆனால் வரும் பிப்ரவரி 19ஆம் தேதிக்குப் பிறகு அமெரிக்காவில் இதுநாள் வரை வழங்கப்பட்டு வந்த பிறப்பால் கிடைக்கும் குடியுரிமை இனிமே கிடைக்காது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளின் பெற்றோரில் யாரேனும் ஒருவர் அமெரிக்க குடிமகனாக இருந்தால் மட்டுமே அந்த குழந்தைக்கு குடியுரிமை கிடைக்கும் என அறிவித்துள்ளார். இதனால் அமெரிக்காவில் தங்கியிருக்கும் பல்வேறு இந்திய தம்பதிகளும் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு மாற்று வழிமுறைகளை நாட தொடங்கியுள்ளனர். அமெரிக்க நீதிமன்றம் அதிபர் டிரம்பின் இந்த ஆணைக்கு தற்காலிக தடை விதித்திருந்தாலும், நீதிமன்ற தீர்ப்பு எப்படி அமைய போகிறது என்பதை கணிக்க முடியாது.
இந்த நிலையில் அமெரிக்காவில் தங்கி இருக்கக்கூடிய இந்தியர்கள் EB-5 விசா மூலம் அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கு திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு வழிவகை செய்யக்கூடிய ஒரு விசா தான் ஈபி -5 விசா. அமெரிக்காவில் முதலீடு செய்யக்கூடிய வெளிநாட்டவர்களுக்கு கிரீன் கார்டு கிடைக்க இது வழிவகை செய்கிறது. இதன் மூலம் அவர்கள் அமெரிக்க குடியுரிமை பெறுகின்றனர்.
EB-5 Immigrant Investor Program என்ற இந்த திட்டம் மூலம் வெளிநாட்டவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் அமெரிக்கவில் நிரந்தர குடியுரிமை பெற முடியும். அதாவது வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் குறைந்தபட்சம் 8 லட்சம் டாலர்களை (6 கோடி ரூபாய்) முதலீடு செய்ய வேண்டும்.
இந்த முதலீட்டின் மூலம் 10க்கும் மேற்பட்ட அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும் .அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அந்த பணத்தை முதலீடு செய்த நபருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் கிரீன் கார்டு கிடைத்துவிடும்.
இந்த நிலையில் அமெரிக்காவிலேயே தங்களுடைய குழந்தைகளை வளர்க்க வேண்டும் என எண்ணக்கூடிய இந்தியர்கள் பலரும் தற்போது ஈபி-5 விசா மூலம் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கான முயற்சிகளை கையில் எடுத்திருப்பதாக அமெரிக்காவில் செயல்படக்கூடிய நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் அண்மைகாலமாக ஈபி-5 விசாவுக்கு விண்ணப்பம் செய்திருப்பவர்களில் இந்தியர்களே அதிகம் என்றும் அதற்கு அடுத்தபடியாக சீனர்கள் மற்றும் வியட்நாம் நாட்டை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications