அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசு முறை பயணமாக சீனா சென்றுள்ளார். உலகமே டிரம்பின் சீன பயணத்தையும், டிரம்ப் - ஸீ ஜின் பிங் சந்திப்பு குறித்து தான் பேசுகிறது. ஈரான் போருக்கு மத்தியில் டிரம்பின் சீன பயணம் அமைந்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
டிரம்ப் தன்னுடைய சீன பயணத்தில் அமெரிக்க முன்னணி தொழிலதிபர்களையும் அழைத்து சென்றுள்ளார். 20க்கும் அதிகமான நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் டிரம்ப் உடன் சீனா சென்றுள்ளனர். டெஸ்லா தலைவர் எலான் மஸ்க், ஆப்பிள் நிறுவன டிம் குக், மெடா, பிளாக்ராக், பிளாக் ஸ்டோன் என பல தொழிலதிபர்களும் டிரம்ப் உடன் சீனா சென்றுள்ளனர். எனவே இரு நாடுகளுக்கும் இடையே தொழில் ரீதியான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

இந்நிலையில் சீனா சென்றுள்ள எலான் மஸ்க், டிம் குக் ஆகியோர் தங்களின் போனை கூட கொண்டு செல்லவில்லை. டிரம்ப்புடன் சீனா சென்றிருக்கும் எலான் மஸ்க் , டிம் குக் போன்ற முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு ஒரு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களின் தனிப்பட்ட செல்போன்கள் மற்றும் லேப்டாப்களை சீனாவுக்குள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சீனாவின் உளவு பார்க்கும் திறன் மற்றும் ஹேக்கிங் குறித்த அச்சமே இதற்கு முக்கிய காரணம். சீனாவுக்குள் கொண்டு செல்லப்படும் எந்தவொரு டிஜிட்டல் சாதனமும், ஹோட்டல் வைஃபை இணைப்பும் கண்காணிக்கப்படலாம் அல்லது ஹேக் செய்யப்படலாம் என்று அமெரிக்க உளவுத்துறை நம்புகிறது.
இதனால் டிரம்ப்பின் குழுவினர் தங்களின் வழக்கமான போன்களுக்குப் பதிலாக, அடிப்படை வசதிகள் மட்டுமே கொண்ட 'க்ளீன்' (Clean) அல்லது தற்காலிக சாதனங்களைப் பயன்படுத்துகின்றனர். இந்த சாதனங்கள் பயணத்திற்குப் பிறகு முழுமையாகச் சோதிக்கப்படும் அல்லது அழிக்கப்படும் என சொல்லப்படுகிறது. "சீனாவில் நீங்கள் எதைச் செய்தாலும், எதைப் பேசினாலும் அது கண்காணிக்கப்படும்" என்று அமெரிக்க அதிகாரிகள் தங்களின் குழுவினரை எச்சரித்துள்ளனர்.
ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக், டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க், போன்ற பெரும் தொழிலதிபர்களும் இந்த டிஜிட்டல் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுள்ளனர். ஆனால் சீனா இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டப்படி தங்களின் நாட்டில் பாதுகாப்பாக இருப்பதாக சீனா தரப்பில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications

