அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான நீடித்து வரும் மோதலுக்கு மத்தியில், புதிய அரசியல் தலைமையுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். Truth Social தளத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், "புதிய மற்றும் சமநிலையான ஆட்சி அமைப்புடன்" அமெரிக்கா தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் அடைந்துள்ளதாக டிரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டாலும், உடனடி ஒப்பந்தம் எட்டப்பட வேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம், இரு நாடுகளுக்கும் இடையிலான ராணுவ நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வர முயற்சி நடைபெற்று வருகிறது.

அதே பதிவில், ஒப்பந்தம் விரைவில் எட்டப்படவில்லை என்றால் அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தயார் நிலையில் இருப்பதாக டிரம்ப் எச்சரித்துள்ளார். குறிப்பாக, Hormuz Strait உடனடியாக திறக்கப்படவில்லை என்றால், ஈரானின் முக்கியமான மின்சார உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் கிணறுகள் மற்றும் Kharg தீவு உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் தனது பதிவில் கூறியுள்ளார்.
இந்த கட்டமைப்புகள் இதுவரை திட்டமிட்டபடி தாக்கப்படாமல் வைக்கப்பட்டுள்ளன என்றும், அவை அமெரிக்காவின் எதிர்கால நடவடிக்கைகளில் முக்கிய இலக்காக மாறக்கூடும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இந்த எச்சரிக்கை உலக சந்தைகளில் கூடுதல் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
அமெரிக்காவின் 15 புள்ளிகள் கொண்ட அமைதி ஒப்பந்தத்தை ஈரான் கடுமையாகவும், முழுமையாகவும் மறுத்துள்ளது. ஈரான் வெளியுறவு அமைச்சக செய்திதொடர்பாளரான Esmaeil Baghaei கூறுகையில், அமெரிக்கா வழங்கியுள்ள திட்டங்கள் நியாயமற்ற மற்றும் ஒருதலைப்பட்சமானவை என தெரிவித்துள்ளார்.
இந்த கருத்து, இரு நாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தை இன்னும் சரியான முறையில் கையில் எடுக்காததை காட்டுகிறது. இதனால், சமாதான ஒப்பந்தம் உடனடியாக எட்டப்படும் வாய்ப்பு குறைந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்த மோதல் தொடர்ந்தால், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. கச்சா எண்ணெய் பியூச்சர்ஸ் 120 டாலரை இன்று கடந்து கூடுதல் அதிர்ச்சி கொடுத்துள்ள. குறிப்பாக Hormuz Strait முடங்கியுள்ளதால் எரிபொருள் செலவுகள் உயர்ந்து, உலகளாவிய பணவீக்கம் அதிகரிக்கலாம். இது பங்குச்சந்தைகள் மற்றும் சர்வதேச வர்த்தகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
டிரம்ப் வெளியிட்டுள்ள இந்த கடுமையான எச்சரிக்கை, அமெரிக்கா-ஈரான் மத்தியிலான பதற்றம் தொடர்ந்து மோசமாக இருப்பதை காட்டுகிறது. இதேவேளையில் ஈரான் உடனான அமெரிக்க போரில் எமன் நாட்டின் ஹவுதீஸ் அமைப்பும் இணைந்துள்ளதால் புது பதற்றம் உருவாகியுள்ளது.
இந்த நிலை தொடர்ந்தால், அது உலக அரசியல் மட்டுமல்லாமல், பொருளாதாரத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பது நிபுணர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.


Click it and Unblock the Notifications