வாஷிங்டன், அமெரிக்கா: அமெரிக்க அரசு புதிதாக கோல்டு விசா என்ற ஒரு புதிய விசா நடைமுறையை கொண்டு வந்திருக்கிறது . இதன் மூலம் அமெரிக்காவில் ஐந்து மில்லியன் டாலர்களை முதலீடு செய்யும் நபர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஏற்கனவே இருக்கும் ஈபி-5 விசா திட்டத்திலும் அமெரிக்காவில் கணிசமான தொகையை முதலீடு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு எளிதாக குடியுரிமை வழங்கப்பட்டது. இந்த திட்டத்தில் வெளிநாட்டவர்கள் 8 லட்சம் டாலர் முதல் 1 மில்லியன் டாலர் வரை முதலீடு செய்து குறைந்தது 10 பேருக்காவது வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். முதலீடு செய்த 6 முதல் 8 ஆண்டுகளில் கிரீன் கார்டு கிடைக்கும்.இந்த விசா திட்டத்தை மாற்றியமைக்கும் வகையில் டிரம்ப் நிர்வாகம் கோல்டு கார்டு விசா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற வேண்டும் என விரும்பினால் தற்போது இருக்கும் ஹெச்1பி விசா மற்றும் பிற விசா நடைமுறைகளில் நீண்ட காலமாகும். ஆனால் 44 கோடி ரூபாய் முதலீடு செய்தால் எளிதாக நிரந்தர குடியுரிமை கிடைத்து விடும். இந்த கோல்டு கார்டு திட்டத்தின் மூலம் அமெரிக்காவிற்கு கணிசமான தொகை முதலீடாக வரும் என டிரம்ப் நிர்வாகம் நம்புகிறது.
இந்தியாவை சேர்ந்த பல்வேறு பட்டதாரிகளும் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட வேண்டும் என எண்ணுகின்றனர். விசா கிடைத்து வேலைக்கு சென்றாலும் நிரந்தர குடியுரிமை கிடைப்பது சிக்கலாக இருக்கிறது. ஏற்கனவே அமெரிக்காவில் தங்கி வேலை செய்யும் இந்தியர்கள் தங்களுக்கு நிரந்தர குடியுரிமை கிடைக்காது என அச்சத்தில் இருக்கின்றனர்.
இந்த நிலையில் தான் கோல்டு கார்டு என்ற விசா திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது டிரம்ப் நிர்வாகம். இதில் முதலீடு செய்தால் மட்டுமே போதும், ஈபி-5 விசாவை போல வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனவே அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் இதன் மூலம் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வரக்கூடிய இந்தியாவை சேர்ந்த மாணவர்களை கூட வேலைக்கு அமர்த்தி விட முடியும் என டிரம்ப் கூறுகிறார்.
இந்த மாணவர்கள் முதலீடு செய்தாலே போதும் அவர்களுக்கு நிரந்தர குடியுரிமை கிடைக்கும் எனவே அவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற மாட்டார்கள் என டிரம்ப் கூறுகிறார். தற்போது இருக்கக்கூடிய குடியேற்ற விதிமுறைகள் அமெரிக்காவில் கல்வி பயின்று முடிக்கும் தொழில் நிபுணர்கள் நிரந்தர குடியுரிமை பெறுவதில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துகின்றன, அதை இந்த விசா திட்டம் மாற்றி அமைக்கும் என சொல்லப்படுகிறது.
இந்த திட்டத்தை அறிவித்த பிறகு பேசிய டிரம்ப், இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் அமெரிக்காவிற்கு படிப்புக்காக வருகை தருகிறார்கள். இங்கே இருக்கும் ஹார்வர்டு உள்ளிட்ட பிரதான பல்கலைக்கழகங்களில் படிப்பை முடிக்கிறார்கள். பல்கலைக்கழகத்தில் படிக்கும் போதே பெரு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைக்கிறது இருந்தாலும் அவர்கள் தொடர்ந்து இந்த நாட்டிலேயே இருப்பார்களா இல்லையா என்பதால் நிறுவனங்கள் வேலைக்கு எடுப்பதில்லை.
இவ்வாறு அமெரிக்காவில் பெரிய பல்கலைக்கழகங்களில் படித்துவிட்டு பலரும் அவர்களுடைய சொந்த நாடுகளுக்கு சென்று அங்கே தொழில் தொடங்கி பெரும் பணக்காரர்களாக மாறுகிறார்கள் வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தி தருகிறார்கள் , இது அமெரிக்காவுக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது என டிரம்ப் கூறியுள்ளார். எனவே திறமையான நபர்களை அமெரிக்கா தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என தெரிவித்துள்ளார்.
உலகில் பல்வேறு நாடுகளிலும் தங்கள் நாட்டில் கணிசமான தொகை முதலீடு செய்பவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்குகிறது. உதாரணமாக போர்ச்சுகல் நாட்டில் சுமார் 5 லட்சம் டாலர்களை முதலீடு செய்யக்கூடிய வெளிநாட்டவர்கள் எளிதாக குடியுரிமை பெற முடியும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications