வாஷிங்டன், அமெரிக்கா: அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு புதிய அமெரிக்க மூலோபாய நாணய கையிருப்பில் கிரிப்டோ கரன்சியும் சேர்க்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு கிரிப்டோ முதலீட்டாளர்கள் மத்தியில் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்பினை பொறுத்தவரை கிரிப்டோ கரன்சிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டவர். அதனால் தான் கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்ற போதும், தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற போதும் கிரிப்டோ கரன்சிகளின் மதிப்பு பல மடங்கு உயர்ந்தது. குறிப்பாக ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற நாளில் பிட்காயின் வரலாறு காணாத உச்சத்தை எட்டியது.

கடந்த சில நாட்களாக பிட்காயின் மதிப்பு சரிந்திருந்த நிலையில் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு மீண்டும் பிட்காயின் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி தந்துள்ளது. இதன் மூலம் அமெரிக்க அரசு பிட்காயின்களுக்கான ஒரு கையிருப்பை உருவாக்க இருக்கிறது. அமெரிக்க அரசு பல்வேறு குற்றவியல் மற்றும் சிவில் வழக்குகளில் பறிமுதல் செய்யக்கூடிய பிட்காயின்களை இந்த இருப்பில் சேகரிக்கும்.
பாரம்பரிய பண கையிருப்புகள் போல இல்லாமல் அரசாங்கம் இந்த பிட்காயின் ரிசர்விலிருந்து எதையும் விற்பனை செய்யாது அதற்கு பதிலாக இதனை நீண்ட காலத்திற்கு சேமித்து வரும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பிட்காயின் மட்டுமில்லாமல் அமெரிக்க அரசு யுஎஸ் டிஜிட்டல் ஆசெட் ஸ்டாக் பைல் (U.S. Digital Asset Stockpile) என்ற பெயரில் டிஜிட்டல் கரன்சிகளுக்கான இருப்பை உருவாக்கியுள்ளது. இதில் எரித்ரியம், சொலேனா, எக்ஸ்ஆர்பி உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளும் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறு அரசே கிரிப்டோ கரன்சிகளை கையிருப்பாக சேகரிக்க தொடங்கி இருப்பதன் மூலம் அரசு தங்கள் கருவூலத்தில் பிட்காயின்களை வாங்கி வைக்க பணம் செலவு செய்ய வேண்டிய தேவை இருக்காது, அதே வேளையில் அரசின் பிட்காயின் கையிருப்பும் உயரும். மேலும் அமெரிக்க அரசின் கீழ் செயல்படக்கூடிய ஒவ்வொரு துறையும் தாங்கள் கைப்பற்றும் பிட்காயின்கள் உள்ளிட்ட கிரிப்டோ நாணயங்கள் குறித்த விவரங்களை இந்த டிஜிட்டல் ஆசெட் துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து கிரிப்டோ சந்தையில் பிட்காயின், உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளின் மதிப்பு பல மடங்கு அதிகரித்தது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த முடிவின் மூலம் அமெரிக்க அரசு பிட்காயின் போன்ற கிரிட்டோ கரன்சிகளுக்கு ஒரு அங்கீகாரம் அளித்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது. மற்ற நாடுகளும் இதனை பின்பற்றுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதன் மூலம் இது போன்ற டிஜிட்டல் கரன்சிகளின் மதிப்பு அதிகரிக்கும்.
இந்தியாவில் அரசு கிரிப்டோ கரன்சிகளை அங்கீகரிக்கவில்லை ஆனால் கிரிப்டோ மூலம் கிடைக்கும் லாபத்திற்கு தனிநபருக்கு வருமான வரி விதிக்கிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications