ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை காரணமாக கூறி அமெரிக்க அரசு இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் இறக்குமதி வரியை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு காரணமாக இருப்பவர் அதிபரின் வர்த்தக ஆலோசகரும் அதிபரின் வர்த்தக குருவாகவும் செயல்படும் பீட்டர் நவாரோ.
டிரம்பின் வர்த்தக ஆலோசகர்: பீட்டர் நவாரோவை பொருத்தவரை சீனா மற்றும் இந்தியா மீது கடுமையான நிலைப்பாட்டை கொண்டவர். குறிப்பாக ரஷ்யா உடன் இந்தியா வைத்திருக்கும் வர்த்தக உறவுகளுக்கு கடுமையான எதிர்ப்பு நிலையை கொண்டிருப்பவர். இந்தியா தான் கச்சா எண்ணெய் வாங்கி பொருளாதார ரீதியாக ரஷ்யாவை வலுப்படுத்துகிறது என தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருபவர். உக்ரைனில் நடப்பது புதினின் போர் அல்ல மோடியின் போர் என நேரடியாகவே விமர்சனம் செய்தவர்.

50% வரிவிதிப்புக்கு காரணமானவர்: நவாரோவின் ஆலோசனையின் பேரில்தான் அமெரிக்க அரசு இந்தியா மீது 50 சதவீத வரியை விதித்திருக்கிறது. இந்த சூழலில் ஃபாக்ஸ் நியூஸ் சேனலுக்கு பேட்டி அளித்திருக்கும் பீட்டர் நவாரோ லட்சக்கணக்கான இந்திய மக்களின் இழப்பில் பிராமணர்கள் லாபம் ஈட்டுகிறார்கள் இதை நிறுத்த வேண்டும் என பேசி இருக்கிறார். அமெரிக்காவில் பெரும் பணக்காரர்களை பாஸ்டன் பிராமணர்கள் என கூறுவார்கள். அந்த வகையில் அவர் இங்கே பிராமணர்கள் என கூறுவது இந்திய பணக்காரர்களை தான்.
பிராமணர்கள் என கூறுவது ஏன்?: நான் சொல்வதெல்லாம் இந்திய மக்களே தயவு செய்து இங்கே என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள் பிராமணர்கள்(பெரும் பணக்காரர்கள்) இந்திய மக்களின் இழப்பில் லாபம் ஈட்டுகிறார்கள் இதனை நாம் நிறுத்த வேண்டும் என நவாரோ பேசியிருக்கிறார். அதாவது உக்ரைன் போருக்கு பின்னர் இந்திய நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கி அதனை சுத்திகரித்து மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்து லாபம் பார்க்கின்றன, ஆனால் இதனால் ஏற்பட்டுள்ள வரி விதிப்பை சந்திப்பது சாதாரண மக்களே என அவர் கூறி இருக்கிறார்.

யாரை குறி வைக்கிறார்? : ரஷ்யாவின் சலவை இயந்திரமாக இந்தியா மாறிவிட்டது, உக்ரைன் போருக்கு பெரும் பணக்காரர்கள் எண்ணெய் ஊற்றுகிறார்கள் என அவர் சாடி இருக்கிறார். ரஷ்யாவிடம் இருந்து அதிக கச்சா எண்ணெய் வாங்குவது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தான். மேலும் நயாரா எனர்ஜி என்ற தனியார் நிறுவனமும் அதிக கச்சா எண்ணெய் வாங்குகிறது. எனவே நவாரோ மறைமுகமாக முகேஷ் அம்பானி போன்றவர்களை தான் குறிப்பிடுகிறார் என கூறப்படுகிறது.
மோடி சிறந்த தலைவர்: முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி ஒரு சிறந்த தலைவர் , இந்திய தலைவர்கள் ரஷ்ய அதிபர் மற்றும் சீன அதிபருடன் எவ்வாறு ஒத்துழைக்கிறார்கள் என்பது புரியவில்லை , அதே சமயம் இந்தியாவின் உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்று நவேரா கூறியிருக்கிறார் . கடந்த சில வாரங்களாகவே நவாரோ தொடர்ந்து இந்தியாவை விமர்சனம் செய்த வண்ணம் இருக்கிறார்.
நவாரோவின் பேச்சுக்கு கண்டனம்: இதனிடையே நவாரோவின் பிராமணர்கள் என்ற சொல் பயன்பாட்டுக்கு பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் உறுப்பினரான சஞ்சீவ் சன்யால் நவேராவின் கருத்து அவர் யார் என்பதை வெளிப்படுத்தி விட்டது இந்தியாவுக்கு எதிரான கட்டுக்கதைகளை கட்டவிழ்த்துவிடும் கட்டுப்பாடு அவரிடமே இருக்கிறது என்பது தெரிந்துவிட்டது என கூறியுள்ளார். சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அமெரிக்காவில் பெரும் பணக்காரர்களை பாஸ்டன் பிராமணர்கள் என குறிப்பிடுவதை நான் அறிவேன் இருந்தாலும் இந்தியாவில் அது ஒரு ஜாதியின் அடையாளம், டிரம்ப் நிர்வாகத்தில் இருக்கும் நவேராவுக்கு இது தெரியாமல் இல்லை, அப்படி இருந்தும் வேண்டுமென்றே அவர் இந்த சொல்லை பயன்படுத்தி இருப்பது தவறானது என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications