அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபர் வான்ஸ் கலந்து கொண்ட வெள்ளை மாளிகை செய்தியாளர்களுக்கான விருந்து நிகழ்ச்சியில் அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் உலகம் முழுவதுமே பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்திய நபரை கைது செய்தனர். நல்வாய்ப்பாக இந்த நிகழ்வில் அதிபர் உள்ளிட்டோர் காயம் இன்றி தப்பினர்.
இருந்தாலும் ஈரான் போர் நடைபெற்று வரக்கூடிய சூழலில் அமெரிக்க அதிபர் டிரம்ப்-இன் பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியை இந்த சம்பவம் எழுப்பி இருக்கிறது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிக்க கூடிய செய்தியாளர்களுக்காக வாஷிங்டனில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் இரவு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப், அவருடைய மனைவி மெலனியா மற்றும் துணை அதிபர் வான்ஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

அந்த சமயத்தில் திடீரென அங்கே ஒரு நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதனை அடுத்து அதிபர் உள்ளிட்டோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. துப்பாக்கி சூடு நடத்திய நபர் கலிபோனியாவை சேர்ந்த 30 வயதான கோல் அலன் என்பது தெரிய வந்திருக்கிறது.சமூக வலைத்தளங்களில் அமெரிக்க அரசு அவரது புகைப்படத்தையும் வெளியிட்டு இருக்கிறது.
45 ஆண்டுகளுக்கு முன்னர் இதே ஹோட்டலில் தான் அப்போதைய அதிபராக இருந்த ரொனால்ட் ரீகன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இன்னும் அமெரிக்க பாதுகாப்பு படை பாடம் கற்கவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே ஒரு சம்பவம் நடந்துள்ள இடத்தில் பாதுகாப்பை இன்னும் பலப்படுத்தி இருக்க வேண்டுமே ஏன் தவறவிட்டார்கள் என்பது தான் பூதாகரமாகி இருக்கிறது.

வெள்ளை மாளிகையில் இருந்து 1.5 மைல்கள் தூரத்தில் அமைந்திருக்கிறது ஹில்டன் ஹோட்டல். பல முக்கிய அரசு விருந்துகள் இங்கே நடக்கும். பெரிய அளவிலான கூட்டத்தையும் கட்டுப்படுத்த கூடிய அமெரிக்க அரசின் ரகசிய பாதுகாப்பு படையினரால் சான்றிதழ் தரப்பட்ட சிறந்த பாதுகாப்பான ஒரு இடமாக இந்த ஹோட்டல் கருதப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 2500 பேர் பங்கேற்று இருந்தபோதுதான் இந்த துப்பாக்கி சூடு நடந்திருக்கிறது. அதிபர், துணை அதிபர் என இரண்டு முக்கியமான நபர்கள் மட்டும் இல்லாமல் அமெரிக்க அரசாங்கத்தின் முக்கியமான பலரும் இதில் பங்கேற்று இருந்தபோதுதான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
துப்பாக்கி சூடு நடத்திய நபர் தற்காலிகமாக அந்த இடத்திற்கு வரவில்லை. முன்கூட்டியே அவர் திட்டமிட்டு வந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற குடியரசு கட்சி உறுப்பினரான காரி லேக் இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ள வந்தேன். அப்போது என்னிடமிருந்த டிக்கெட்டையோ என்னுடைய போட்டோ ஐடி கார்டியோ யாருமே பரிசோதனை செய்யவில்லை, அது உண்மையாகவே நிகழ்வுக்கான டிக்கெட் தானா என்பதை கூட அவர்கள் பார்க்கவில்லை இப்படி ஒரு பாதுகாப்பு குறைபாடு தான் அந்த துப்பாக்கி சூடு நடத்தும் நபரை அங்கே வரவழைக்கச் செய்திருக்கிறது என கூறியிருக்கிறார்.
எந்த ஒரு பாதுகாப்பு பரிசோதனையும் இல்லாமல் விருந்தினர்கள் அனைவரும் நேரடியாகவே விருந்து நடைபெற்ற இடத்திற்கு வருகை தர முடிந்தது எனக் கூறியிருக்கிறார். துப்பாக்கி சூடு நடத்திய நபர் முந்தைய தினமே ஹில்டன் ஹோட்டலில் அறை எடுத்து தங்கி இருக்கிறார் என்பதும் தற்போது தெரியவந்திருக்கிறது. அதிபர் மற்றும் முக்கிய தலைகள் பங்கேறேகும் நிகழ்ச்சி நடக்கும் ஹோட்டலில் யார் எல்லாம் தங்கி இருக்கிறார்கள் என்பதை தானே முதலில் பரிசோதனை செய்ய வேண்டும், அதை கூட செய்யாமல் எப்படி விட்டனர் என பலரும் வினவுகின்றனர்.
அதிபர் மீது துப்பாக்கி சூடு நடத்த ஒரு அறையை எடுத்து தங்கினாலே போதும் என்ற நிலைக்கு பாதுகாப்பு வந்துவிட்டது என முன்னாள் எஃப்பிஐ அதிகாரி லேக் கேரி கூறியுள்ளார். துப்பாக்கி சூடு நடத்திய நபர் ரயில் மூலம் பயணம் செய்து சிகாகோ வந்து அங்கிருந்து வாஷிங்டன் வந்து ஹில்டனில் ரூம் எடுத்துள்ளார். பல்வேறு ஆயுதங்களோடு அவர் அந்த ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார்.
ஹோட்டலில் கூட வழக்கமான பரிசோதனைகள் எதுவும் நடக்கவில்லை. துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் உறவினர்களுக்கு அனுப்பிய தகவலில், சீக்ரெட் சர்வீஸ் போலீசார் என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை, செக்யூரிட்டி கேமராக்கள் இல்லை , மெட்டல் டிடெக்டர்கள் வேலை செய்யவில்லை நான் இத்தனை ஆயுதங்களோடு இங்கே பத்திரமாக வந்துவிட்டேன் என கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே நிகழ்ச்சி நடைபெறக்கூடிய இடத்திற்கு வெளியிலே போராட்டம் ஏதும் நடந்து விடக்கூடாது என்பதில் மட்டுமே பாதுகாப்பு படையினர் கவனம் செலுத்தினார்களே தவிர உள்ளே தங்கி இருந்தவர்கள் குறித்து அவர்கள் பரிசோதனை செய்யவில்லை என நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கூறுகின்றனர். வழக்கமான விளையாட்டு நிகழ்ச்சிக்கு நடத்தப்படும் பாதுகாப்பு சோதனை கூட இதற்கு நடத்தப்படவில்லை என தெரிவித்துள்ளனர். துப்பாக்கி சூடு நடத்திய நபரின் இலக்கு டிரம்ப் மற்றும் சில உயர் அதிகாரிகள் என சொல்லப்படுகிறது, அவரிடம் இருந்து கத்தி, லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications

