மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் மூன்று வார காலப் போரில் புதிய திருப்பம் உருவாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை 'குறைக்கும்' நிலையை பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளதுடன், இதேபோல் உடனடி போர்நிறுத்தம் (ceasefire) குறித்து ஆர்வம் இல்லை எனவும் கூறியுள்ளார். இந்த நிலை உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க பொருளாதாரம் நாளுக்கு நாள் மோசம் அடைந்து வருகிறது, குறிப்பாக போர் துவங்கிய பின்பு அதிகப்படியான செலவுகள் மூலம் அந்நாட்டின் கடன் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. சமீபத்தில் ஈரான் மீதான போருக்காக 200 பில்லியன் டாலர் நிதி வேண்டுமென நாடாளுமன்றத்தில் கேரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. வேலைவாய்ப்பு குறைப்பு, பணவீக்கம் அதிகரிப்பு, ஏஐ தாக்கம், கடன் அதிகரிப்பு ஆகிய காரணத்தால் அமெரிக்க பொருளாதாரத்தின் பேஸ்மென்ட் வீக் ஆகியுள்ளது.

போரில் வெற்றி
இந்த நிலையில் டொனால்டு டிரம்ப் வெள்ளிக்கிழமை தனது சமூக ஊடகப் பதிவில், 'மத்திய கிழக்கில் போரில் எங்கள் ராணுவ இலக்குகள் நிறைவேறுவதற்கு மிக அருகில் உள்ளோம்' என்று கூறினார். இதுவே அமெரிக்கா விரைவில் ராணுவ நடவடிக்கைகளை குறைக்கக்கூடும் என்று கூறியது மூலம் இந்த போர் நிறுத்தம் குறித்து முதல் தெளிவான சிக்னலாக பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் டிரம்ப், 'நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்; இதே சூழலில் உடனே தாக்குதல் நிறுத்தம் தேவையில்லை' என்று டிரம்ப் தெரிவித்துள்ளதால் நிலைமை இன்னும் பதற்றமானதாகவே இருப்பதை காட்டுகிறது.
அமெரிக்க ராணுவ படை
அமெரிக்கா தரப்பில் நிலப்பரப்பில் ராணுவ வீரர்கள் நேரடியாக போரில் ஈடுபடத் திட்டமில்லை என கூறப்பட்டாலும், கூடுதல் 2,200 முதல் 2,500 மெரைன் படையினர் மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது எதிர்காலத்தில் நிலைமை மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது என்பதைக் காட்டுகிறது.
ஈரான் தரப்பு
ஈரானின் புதிய உயர் தலைவர் Mojtaba Khamenei, பாரசீக புத்தாண்டின் முதல் நாளை முன்னிட்டு வெளியிட்ட செய்தியில், 'எதிரிகளுக்கு மயக்கம் தரும் அளவிலான தாக்குதலை வழங்கியுள்ளோம்' என்று தெரிவித்துள்ளார். இது, போரின் தீவிரம் இன்னும் குறையவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.
ஜெருசலேம் தாக்குதல் குற்றச்சாட்டு
இந்நிலையில், இஸ்ரேல், ஜெருசலேமில் உள்ள முக்கிய மத இடங்களை ஈரான் தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளது. Al-Aqsa Mosque, Western Wall மற்றும் Church of the Holy Sepulchre அருகே ஏற்பட்ட தாக்குதலில் பெரிய குழி உருவானது. இதனால் உலகளாவிய மத மற்றும் அரசியல் பதற்றம் மேலும் உயர்ந்துள்ளது.
ஹார்மூஸ் நீரிணை
ஈரான் கட்டுப்பாட்டில் உள்ள Strait of Hormuz வழியாக உலகளவில் பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெய் மற்றும் எல்.என்.ஜி.யின் சுமார் 20% போக்குவரத்து நடைபெறுகிறது. தற்போது இந்த வழித்தடம் முடங்கிய நிலையில் இருப்பதால், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பெரும் தடைகள் ஏற்பட்டு உள்ளது.
டொனால்டு டிரம்ப், இந்த நீரிணையை பாதுகாப்பது மற்ற நாடுகளின் பொறுப்பு எனக் கூறியதுடன், அமெரிக்கா தேவையெனில் உதவ தயாராக உள்ளது என்றார்.
உலக சந்தைகள் அதிர்ச்சி
இந்த போரின் தாக்கம் உலக பொருளாதாரத்திலும் தென்பட்டுள்ளது. எண்ணெய் விலை திடீரென உயர்ந்ததால், பங்குச்சந்தைகள் கடுமையாக சரிந்தன. நீண்டகால விநியோக தடைகள் உலக பொருளாதார மந்தநிலைக்கு வழிவகுக்கும் என்ற அச்சம் முதலீட்டாளர்களிடையே அதிகரித்துள்ளது.
இறுதியாக, அமெரிக்கா அரசு மத்திய கிழக்கு பகுதியில் ராணுவ நடவடிக்கைகளை குறைக்கும் யோசனையில் இருந்தாலும், போர்நிறுத்தம் குறித்து உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை. ஈரான் தரப்பின் கடுமையான பதில், ஜெருசலேம் தாக்குதல் குற்றச்சாட்டு மற்றும் ஹார்மூஸ் நீரிணை பிரச்சினை ஆகியவை இணைந்து, இந்த மோதல் உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளன.


Click it and Unblock the Notifications