அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்ட புதிய நிர்வாக உத்தரவின் மூலம், ரெசிப்பரோக்கல் வரிகளை விதிக்கும் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையின்படி, அமெரிக்கா எந்த நாட்டிற்கு ஏற்றுமதி செய்கிறதோ, அந்த நாடு அமெரிக்கப் பொருட்களுக்கு எவ்வளவு வரி விதிக்கிறதோ, அதே அளவிலான வரியை அமெரிக்காவும் அந்நாட்டின் பொருட்களின் இறக்குமதிக்கும் விதிக்கும்.
இந்த புதிய கொள்கை உலக வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இந்தியா போன்ற அதிக வரி விதிக்கும் நாடுகளை இது குறிவைக்கிறது.

டிரம்ப் கையெழுத்திட்ட புதிய நிர்வாக உத்தரவின்படி அமெரிக்கப் பொருட்கள் மீது எந்த நாடுகள் எவ்வளவு வரிகளை விதிக்கிறது, எந்த வகையிலான வர்த்தக தடைகளை விதித்துள்ளது என்பதை நாடு வாரியாக ஆய்வுகளைச் செய்ய இந்த உத்தரவு மூலம் அறிவுறுத்துள்ளார். இந்த ஆய்வை அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் மற்றும் பிற அரசு நிறுவனங்கள் இணைந்து மேற்கொள்ளும்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த உத்தரவில் டொனால்டு டிரம்ப் கையெழுத்திடும் போது "உலகில் வேறு எந்த நாட்டையும் விட இந்தியா அதிக வரிகளைக் கொண்டுள்ளது" என்று ராய்ட்டர்ஸ் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுடனான வர்த்தக உறவில் இந்த கொள்கை எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த உத்தரவு கையெழுத்திடப்பட்டு, வரி விதிப்பு குறித்துப் பேசியுள்ளார்.
உலக வர்த்தக அமைப்பின் தரவுகளின்படி, இந்தியாவின் சராசரி வரி விகிதம் 17% ஆகவும், அமெரிக்காவிற்கு சுமார் 3.3% ஆகவும் உள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தியில் தெரிவித்துள்ளது. வர்த்தக எடை அடிப்படையில், இந்தியாவின் வரி விதிப்பு விகிதம் சுமார் 12%, அமெரிக்காவின் விகிதம் 2.2% ஆகவும் உள்ளது. இந்த வேறுபாட்டின் காரணமாக, டிரம்ப் அரசின் இந்த ரெசிப்பரோக்கல் வரிகள் கொள்கை இந்தியாவை அதிகம் பாதிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
இந்தியா தற்போது உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டம் (PLI) மற்றும் விவசாயம் உட்பட பல்வேறு துறைகளுக்கு மானியங்களை வழங்கி வருகிறது. அமெரிக்காவின் ரெசிப்பரோக்கல் வரி கொள்கை அமலாக்கப்படும் பட்சத்தில், இந்த திட்டங்கள் மற்றும் மானியங்கள் பாதிக்கப்படலாம்.
இதன் விளைவாக, இந்தியாவும் அமெரிக்காவும் இடையிலான வர்த்தக உறவில் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. அமெரிக்காவின் இந்த புதிய அணுகுமுறை சர்வதேச வர்த்தகச் சூழலில் பெரும் சவாலாக உருவெடுக்கும். இந்தியா போன்ற நாடுகள் இந்த சவாலை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம்.


Click it and Unblock the Notifications