மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 2,227 புள்ளிகள் குறைந்து 73,137 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 50 குறியீடு 742 புள்ளிகள் குறைந்து 22,161 புள்ளிகளை அடைந்தது. இந்த வீழ்ச்சியின் விளைவாக, மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனம் 14 லட்சம் கோடி ரூபாய் குறைந்து, 389 லட்சம் கோடி ரூபாயாகச் சரிந்தது.
இதேபோல் உலகின் பெரும்பாலான நாடுகளின் பங்குச்சந்தையும் இன்று பெரும் சரிவை எதிர்கொண்ட வேளையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். டிரம்ப்-ன் ரெசிப்ரோக்கல் வரி விதிப்புக்கு இதுவரையில் சீனா மற்றும் கனடா மட்டுமே பதிலடி கொடுத்துள்ளது. இந்த நிலையில் டிரம்ப் சீனா மீது மீண்டும் வரி விதிப்பதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சொந்த சமூக வலைத்தளமான ட்ரூத் சோசியல் தளத்தில் சீனா ஏற்கனவே அமெரிக்கப் பொருட்கள் மீது விதித்துள்ள அதிகப்படியான வரிகள், வர்த்தக கட்டுப்பாடுகள், நிறுவனங்களுக்குச் சட்டவிரோத மானியம் அளிப்பது மற்றும் நீண்ட கால நாணய கையாளுதல் போன்ற பல மோசடிகளை செய்து வரும் வேளையில், ரெசிப்ரோக்கல் வரிக்கு பதிலடியாக 34% வரிகளை விதித்துள்ளது.
அமெரிக்காவுக்கு எதிராக எந்த நாடாவது கூடுதல் வரிகளை விதித்தால் அவர்கள் மீது உடனடியாக புதிய மற்றும் அதிகப்படியான வரிகளை விதிக்கப்படும் என்று நான் எச்சரித்திருந்தேன், அதையும் மீறி சீனா 34 சதவீதம் வரியை புதிதாக விதித்துள்ளது என டொனால்ட் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
இதே பதிவில் சீனா ஏப்ரல் 8, 2025-க்குள் புதிதாக விதிக்கப்பட்ட 34% வரி விதிப்பைத் திரும்பப் பெறாவிட்டால், அமெரிக்கா ஏப்ரல் 9, 2025 முதல் சீனா மீது 50% கூடுதல் வரிகளை விதிக்கும். கூடுதலாக, சீனா அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்தக் கோரிக்கை வைத்த அனைத்து உடனடியாக நிறுத்தப்படும். இதேபோல் வர்த்தக தொடர்பான பேச்சுவார்த்தையைப் பிற நாடுகளுடன் உடனடியாக தொடங்கப்படும் என்று டிரம்ப் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போர் மேலும் தீவிரமடைந்து வருகிறது. இந்த விவகாரம் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
சீனாவிற்கு எதிராக டிரம்ப் விதிக்கும் புதிய வரிகள், இரு நாடுகளின் வர்த்தக உறவை மேலும் மோசமாக்கும். இதனால், உலகளாவிய சந்தையில் பொருட்களின் விலைகள் உயரக்கூடும். மேலும், இது சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலைக்கு வழிவகுக்கும் அபாயமும் உள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்குச் சீனா எவ்வாறு பதிலளிக்கும் என்பதை உலக நாடுகள் தீவிரமாகக் கவனித்து வருகின்றன. இதேபோல் அமெரிக்கா தற்போது வியட்நாம், இந்தியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் வியட்நாம் ஜீரோ வரி விதிப்பு முறைக்குத் தயார் என அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications