ஈரானில் ஒரு மாதத்திற்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு பல்வேறு நாடுகளிலும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் எனர்ஜி லாக்டவுனே போடப்பட்டு விட்டது. எப்போது தான் இந்த போர் முடியும் என கோடிக்கணக்கான மக்கள் காத்திருக்கும் நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிர்ச்சியான ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்காவின் போர் குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய டிரம்ப், அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களில் ஈரான் மீது மிக கடுமையான மிக மோசமான தாக்குதலை நடத்துவோம் என அறிவித்திருக்கிறார். ஈரான் போரில் அடுத்து இரண்டு - மூன்று வாரங்கள் மிக முக்கியமானதாக இருக்கும் என கூறியிருக்கிறார். நம்முடைய நோக்கம் முழுமையாக நிறைவேறும் வரை ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என கூறியுள்ளார்.

அமெரிக்க ராணுவம் சிறப்பாக செயல்படுகிறது, கூடிய விரைவில் நம்முடைய நோக்கம் நிறைவேறிவிடும் என டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரானை அவர்கள் சார்ந்திருக்கும் கற்காலத்திற்கு கொண்டு செல்வோம் என சூளுரைத்துள்ளார். ஈரானில் ஆட்சி மாற்றம் நடைபெற வேண்டும் என்பது நம்முடைய இலக்கு அல்ல எனக் கூறியிருக்கும் அவர், தலைவர் இறந்ததால் தான் அங்கே வேறு ஒருவர் தலைவராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார் என்றார்.
ஈரான் அமெரிக்காவுடன் ஒப்பந்தத்திற்கு வரவில்லை என்றால் ஈரான் நாட்டு மின் கட்டமைப்புகள் அனைத்தையும் அழிப்போம் , இதுவரை இல்லாத தாக்குதல் நடத்தப்படும் என கூறியிருக்கிறார். ஈரானின் எண்ணெய் வளம் நமக்கு தேவையே இல்லை, அதே போல ஹார்முஸ் ஜலசந்தியும் நமக்கு தேவை இல்லை என கூறியுள்ளார். நம்முடைய நட்பு நாடுகளுக்கு உதவுவதற்காக தான் நாம் இந்த போரில் ஈடுபடுகிறோம் , விரைவில் தானாகவே ஹார்முஸ் ஜலசக்தி திறக்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.
அணு ஆயுதங்களை வைத்திருக்கும் ஈரானை நம்மால் ஒருபோதும் நம்ப முடியாது என குறிப்பிட்டு இருக்கும் டிரம்ப், அமெரிக்கா வரை வந்து தாக்கக்கூடிய திறன் கொண்ட ஏவுகணைகளை ஈரான் தயார்படுத்த இருந்தது என புதிய தகவலை வெளியிட்டுள்ளார். தற்போது ஈரானிடம் கடற்படையும் இல்லை விமானப்படையும் இல்லை அவர்களின் தலைவர்களும் இல்லை என தெரிவித்திருக்கிறார். ஈரானின் கடற்படையை அழிக்க வேண்டும், பயங்கரவாதிகளிடமிருந்து கிடைக்கும் ஆதரவை தடுத்து நிறுத்த வேண்டும், அணு ஆயுதங்கள் அவர்கள் கையில் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் இதுதான் அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்காக நிர்ணயம் செய்யப்பட்ட இலக்குகள் எனக் கூறியிருக்கிறார்.
இந்த இலக்குகள் பெரும்பாலும் நிறைவேறிவிட்டன என்றும் ஈரான் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்துவிட்டால் நல்லது, இல்லை என்றால் கடும் தாக்குதல் நடத்தப்படும் என கூறியுள்ளார். ஈரான் போர் அமெரிக்க குழந்தைகளின் எதிர்காலத்திற்கான முதலீடு என்றும் இது நடக்கவில்லை என்றால் மத்திய கிழக்கு நாடுகளையே ஈரான் அழித்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். ஈரான் போர் அமைதியை நோக்கி செல்வதை போல நேற்றைய தினம் பேசி இருந்த டிரம்ப், இன்று ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்துவதாக அறிவித்துள்ளார். டிரம்பின் இந்த அறிவிப்பை அடுத்து பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 4% உயர்ந்து 105 டாலர்களாக உள்ளது.


Click it and Unblock the Notifications