டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் மீது 10 சதவீதத்தில் துவங்கி 25 சதவீதம் வரி விதிப்பதாக அறிவித்திருக்கும் வேளையில், தற்போது பிரான்ஸ் நாட்டின் மீது 200 சதவீத வரி விதிப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரான்ஸ் நாட்டின் ஒயின் மற்றும் சாம்பெயின் மீது 200 சதவீத வரி விதிப்பதாக அச்சுறுத்தியுள்ளார். டிரம்ப் தனது முடிவுக்கு கட்டுப்படாத நாடுகள் மீது தொடர்ந்து வரி விதிப்பு மிரட்டல்களை விடுத்து வருகிறார். இதேபோல் அமெரிக்காவின் நட்பு நாடாக இருந்தாலும், டிரம்ப் சொல்வதை ஏற்க வேண்டும் என நிர்பந்தம் செய்கிறார். இது உலக நாடுகளுக்கு பெரும் பிரச்சனையாக மாறி வருகிறது.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் டிரம்ப் புதிதாக உருவாக்கிய "அமைதி வாரியம்" (Board of Peace) அழைப்பை ஏற்க மறுத்ததால் இந்த பதிலடி வந்துள்ளது. இது அமெரிக்கா-ஐரோப்பா உறவில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் "மேக்ரான் அழைப்பை ஏற்காவிட்டால் பிரான்ஸ் ஒயின் மற்றும் சாம்பெயினுக்கு 200% வரி விதிப்பேன். இதற்கு பின் அவர் அமைதி வாரியத்தில் இணைய வேண்டிய அவசியமில்லை, ஆனால் இணைந்தால் நல்லது" என்று கூறியுள்ளார். இந்த அச்சுறுத்தல் கிரீன்லாந்து தொடர்பான முந்தைய வரி அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து வந்துள்ளது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றாலும், அவரின் நெருங்கிய வட்டாரங்கள் கொடுத்த தகவல் படி, பிரான்ஸ் அமைதி வாரியத்திற்கு வந்த அழைப்பை ஏற்காது. இந்த வாரியம் காசா-வின் நலனுக்காக உருவாக்கப்படுவதாக கூறப்பட்டாலும், இக்குழுவின் நோக்கம் அதை தாண்டி செல்வதாகவும், ஐநா சபையின் கொள்கைகளுடன் முரண்படுவதாகவும் இருப்பதால் இம்மானுவேல் மேக்ரான் இக்குழுவில் சேர மறுப்பதாக தெரிவித்துள்ளார்.
டிரம்ப் உருவாக்கிய இந்த அமைதி வாரியம் இப்போது உலகளாவிய மோதல்களை கையாளும் நீண்டகால அமைப்பாக விரிவடைந்துள்ளது. இந்த வாரியத்தில் நிரந்தர இடம் விரும்பும் நாடுகள் குறைந்தது 1 பில்லியன் டாலர் பங்களிக்க வேண்டும். மேலும் இந்த அமைப்பிற்கு டிரம்ப் தலைவராக இருப்பார். உறுப்பினர்களை அழைப்பதும் முடிவுகளை அங்கீகரிப்பதும் டிரம்ப்-ன் அதிகாரத்திற்கு உட்பட்டது. மேலும் முடிவுகள் பெரும்பான்மையால் எடுக்கப்படும், ஆனால் தலைவரின் ஒப்புதல் அவசியம், தலைவரின் முடிவே இறுதி என இக்குழுவிற்கு கொள்கை வகுக்கப்பட்டு உள்ளது.
இந்த குழுவில் இணைய இதுவரையில் அர்ஜென்டினாவின் ஜாவியர் மிலே, கனடாவின் மார்க் கார்னி உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த அமைதி வாரியத்தின் கொள்கை டாவோஸ் உலக பொருளாதார மன்றத்தில் இந்த இறுதியில் கையெழுத்தாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications