ஈரானில் ஆறு வார காலமாக நடைபெற்று வந்த போர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவும் ஈரானும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருக்கின்றன. இதன் காரணமாக சில நாட்களாக ஈரானில் எந்த ஒரு தாக்குதலும் நடத்தப்படவில்லை.
ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருப்பது உலகிற்கே ஆபத்தானது எனக் கூறி அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி கூட்டு ராணுவ நடவடிக்கையை எடுத்தன. இதனை அடுத்து ஈரானும் பதிலடி கொடுக்க தொடங்கியது. இந்த போரில் ஈரான் நாட்டு உச்சபட்ச தலைவர் கமேனி கொலை செய்யப்பட்டார் அது தவிர ஈரான் பாதுகாப்புத்துறை செயலாளர், ராணுவ தளபதி என ஏராளமான முக்கிய தலைகள் கொல்லப்பட்டனர். இதனால் ஈரான் இன்னும் ஆக்ரோஷமாக பதில் தாக்குதல் நடத்தியது.

ஈரான் உலக நாடுகளுக்கு எல்லாம் செக் வைக்கும் வகையில் முக்கிய எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை திடீரென மூடியது. இதன் காரணமாக வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் எல்பிஜி உள்ளிட்டவை கொண்டுவரப்படவில்லை. இதனால் பல்வேறு நாடுகளை சேர்ந்த கோடிக்கணக்கான மக்களுக்கு எல்பிஜி தட்டுப்பாடு, சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளனர்.
இந்த சூழலில் தான் இருதரப்பு போர் நிறுத்தத்தை அமல்படுத்தியது. இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தியை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கக்கூடிய ஈரான் இதனை வைத்து வருவாய் ஈட்ட திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது. அதாவது ஹார்முஸ் ஜல சந்தியை கப்பல்கள் கடந்து செல்ல வேண்டும் என்றால் அதற்கு சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்திருப்பதாகவும் ஒரு கப்பலுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை நிர்ணயம் செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளியாகின.
ஈரான் தரப்பில் இதனை வைத்துக்கொண்டு வருவாயே பெருக்கு திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது. இது இந்தியா போன்ற நாடுகளுக்கு இது கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும். ஏனெனில் சுங்க கட்டணம் விதிக்கப்பட்டால் மேலும் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி விலை உயரும் இது நேரடியாக மக்களின் மீது தான் சுமத்தப்படும்.
இந்த சூழலில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்லும் கப்பல்களுக்கு சுங்க கட்டணம் விதிப்பதற்கு அமெரிக்கா ஒருபோதும் அனுமதி தராது என தெரிவித்திருக்கிறார். அது ஒரு சர்வதேச வழித்தடம் அங்கே கப்பல்கள் கடந்து செல்ல ஈரான் நிதி வசூலிப்பது எப்படி பொருத்தமானதாக இருக்கும் என்ற கேள்வியை அவர் முன் வைத்திருக்கிறார்.
சர்வதேச கடல் நீர் வழித்தடத்தில் குறிப்பிட்ட நாடு சுங்க கட்டணம் வசூலிப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் இதனை அவர்கள் வலியுறுத்தினாலும் அமெரிக்கா அதை நடக்க விடாது என கூறியிருக்கிறார். இதற்கிடையே ஈரான் நாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் அமெரிக்க துணை அதிபர் தலைமையிலான குழுவினர் இஸ்லாமாபாத்தை வந்தடைந்து இருக்கின்றனர். இன்று இரவு இங்கே அமைதி பேச்சு வார்த்தை என்பது நடத்தப்படுகிறது.


Click it and Unblock the Notifications