சமீபத்தில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் நடந்த போர் பற்றி அனைவரும் அறிந்தது தான். சுமார் 3 மாதங்களுக்கும் மேலாக இரு நாடுகளும் மாறி மாறி சண்டையிட்டு கொண்டன. ஆனால் பேச்சுவார்த்தைக்குப்பின் இரு நாடுகளும் இணைந்து அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிலையில்.. பிரச்சனைகள் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது. ஆனால் ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டு வருவதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.
ஒருவேளை அமெரிக்கா மீண்டும் போரைத் தொடங்க கட்டாயப்படுத்தப்பட்டால் ஈரான் என்ற நாடே இருக்காது என்று ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். இருநாடுகளுக்கும் இடையே நடந்து வந்த பிரச்சனையின் காரணமாக நம் நாட்டில் அத்தனை விலை உயர்வுகள். கேஸ் தொடங்கி பெட்ரோல், டீசல் விலை வரை அனைத்தும் உயரத்தொடங்கின. தற்போதைய அமைதி ஒப்பந்தத்தால் இனிவரும் காலங்களில் விலைவாசி உயர்வு சரியாகிவிடும் என்று உலக நாடுகள் யோசித்த நிலையில் டிரம்ப் விடுத்திருக்கும் எச்சரிக்கை மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி தினசரி அடிப்படையில் கப்பல்கள் போய் வரும் முக்கிய கடல் வழி பாதை ஆகும். இந்தப் பாதையில் சென்ற அமெரிக்க கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு அமெரிக்க படைகள் மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.

சுமார் 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் சுமந்து சென்ற பணமா நாட்டின் கொடியை ஏந்திய கிகு என்ற கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. அதற்கு பதிலடி தாக்குதலை கடந்த சனிக்கிழமை அன்று அமெரிக்கா நடத்தியதாக தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை அன்றும் எவர்லவ்ளி என்ற அமெரிக்க கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
"நாங்கள் ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் மீண்டும் நான் நியாயமாக நடந்து கொள்ள முடியாத சூழல் ஏற்படும். இதனால் தொடங்கிய பணியை முழுமையாக முடித்து வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவோம். அப்படி ஒரு நிலை வந்தால் ஈரான் இருக்கவே இருக்காது என்று ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்.
கடந்த பிப்ரவரி மாதமே இரு நாடுகளும் இணைந்து போரை முடிவுக்கு கொண்டுவரும் என்று உலக நாடுகள் எதிர்பார்த்தன. ஏனெனில் ஈரான் போரின் காரணமாக ஹார்மூஸ் ஜலசந்தியை மூடி வைத்திருந்தது. இந்த முக்கியமான கடல் வழி பாதையின் மூலமாக தான் கச்சா எண்ணெய், எல்பிஜி போன்ற பொருட்கள் உலக நாடுகளைச் சென்றடைகிறது. இரு நாடுகளுக்கும் இடையே மோதல் அதிகரித்தால் போக்குவரத்து தடைபடும் வாய்ப்புள்ளது. மீண்டும் எல்பிஜி சப்ளை முதல் பெட்ரோல் டீசல் விலை அனைத்தும் பாதிக்கும்.
தற்போது ட்ரம்ப் விடுத்திருக்கும் எச்சரிக்கையால் மீண்டும் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மேலும் ஹார்முஸ் கடல்வழிப் பாதையில் பதற்றம் நீடிப்பதால் உலக நாடுகள் கச்சா எண்ணெய் சப்ளை மற்றும் எரிபொருள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடுமோ என்ற கவலையில் உள்ளன.


Click it and Unblock the Notifications