ஏப்ரல் மாதத்தில் அமெரிக்க அதிபரான டோனால்ட் ட்ரம்ப் பரஸ்பர வரி முறையைக் கொண்டு வந்தது அனைவரும் அறிந்ததே. பரஸ்பர வரி முறை என்பது எந்தெந்த நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபடுகிறதோ? அந்தந்த நாடுகளின் வரிக்கு ஏற்ப அமெரிக்காவும் வரி விதிக்கும். அப்படி இருக்கையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஒரு முக்கியமான அறிவிப்பை ட்ரம்ப் வெளியிட்டார்.
ஸ்டீல் இறக்குமதிகள் மீதான வரியை 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக இரட்டிப்பாக்க உள்ளதாகக் கூறினார். இந்த புதிய விகிதம் ஜூன் மாதம் 4-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவித்தார். ஸ்டீல் வரியை இரட்டிப்பாக்கியது ட்ரம்பின் உலகளாவிய வர்த்தகப் போரை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

அத்தியாவசிய கனிமங்கள் மீதான வரியையும், வர்த்தகக் கட்டுப்பாடுகளையும் தளர்த்துவதற்கான ஒப்பந்தத்தை சீனா மீறிவிட்டதாக சமீபத்தில் ட்ரம்ப் குற்றம் சாட்டினார். அவர் குற்றம் சாட்டிய சில மணி நேரங்களிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பென்சில்வேனியாவில் உள்ள ஸ்டீல் மோன் வேலி ஒர்க்ஸ்-இர்வின் ஆலையில் பேசிய டிரம்ப், இந்த வரி உயர்வு உள்நாட்டு ஸ்டீல் உற்பத்தியாளர்களுக்கு நன்மை பயக்கும் என்றும் கூறினார்.
அப்போது, "நாம் 25 சதவீத வரியை விதிக்கப் போகிறோம். அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் மீதான வரியை 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப் போகிறோம். இது அமெரிக்காவில் உள்ள ஸ்டில் தொழிலை மேம்படுத்தும்", என்றும் கூறினார்.
அப்போது சீனாவையும் கடுமையாக விமர்சித்தார் ஷாங்காயிலிருந்து இருந்து வரும் தரமற்ற ஸ்டீலை நம்பி இருக்காமல் அமெரிக்கா பிட்ஸ்பர்க்கின் வலிமையுடனும் பெருமையிடனும் இருக்க வேண்டும் என்றும் கூறினார். இந்த வரி காரணமாக வீடு கட்டுதல், ஆட்டோ மொபைல் மற்றும் கட்டுமான துறைகள் உட்பட ஸ்டீல் தேவையை பெரிதும் நம்பியிருக்கும் தொழில்களுக்கு செலவு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
2018-ஆம் ஆண்டில் ட்ரம்ப் முதன் முதலாக வரி விதித்ததிலிருந்து தற்போது வரை ஸ்டீல் பொருட்களின் விலை 16 சதவீதம் வரை அதிகரித்திருக்கிறது. ஸ்டீல் பொருட்கள், கட்டிடங்கள், பாலங்கள், சாலைகள் போன்ற கட்டுமான பணிகளுக்கு ஸ்டீல் அத்யாவசியமாக இருந்து வருகிறது.
ஸ்டீல் மீதான வரி அதிகரித்தால் கட்டுமான பொருட்களின் விலையும் கடுமையாக உயரும். இதனால் புதிய கட்டுமான திட்டங்களின் செலவுகள் அதிகரிக்கக்கூடும். அதிகரித்த செலவுகள் காரணமாக சில திட்டங்கள் கைவிடப்படவும் வாய்ப்புள்ளது.
கார், பஸ், லாரி போன்ற ஆட்டோமொபைல் துறைகளுக்கு ஸ்டீல் ஒரு முக்கியமான மூலப்பொருளாக இருந்து வருகிறது. வரி உயர்வின் காரணமாக புதிய வாகனங்களின் விலையும் உயரலாம். இது நுகர்வோரை கடுமையாக பாதிக்கும். அமெரிக்காவைப் போலவே பிற நாடுகளும் ஸ்டீல் மீது வரி விதிக்கத் தொடங்கினால் நாட்டில் பெரிய வர்த்தகப் போர் ஏற்படும் வாய்ப்புள்ளது. வர்த்தகப் போர் உலகளவில் விநியோகங்களை சீர்குலைத்து பொருளாதார நிச்சயமற்ற தன்மையை உருவாக்கும். இதனால் பொருளாதார மந்த நிலை ஏற்படும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications