அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் துவக்கி வைத்த வர்த்தகப் போர், உலகளாவிய பொருளாதாரத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த வர்த்தகப் போர் பல நாடுகளுடன் பகைமையை அமெரிக்கா உருவாக்கியிருந்தாலும், இந்த வர்த்தக போர் சிலருக்கு புதிய வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக முகேஷ் அம்பானிக்கு.
இந்தியா மற்றும் ஆசிய அளவில் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி-யின் குஜராத் சுத்திகரிப்பு ஆலைக்கு அமெரிக்காவிலிருந்து ஈத்தேன் (ethane) இறக்குமதி செய்யப்பட உள்ளது. இது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு உலகளாவிய வர்த்தகத்தில் புதிய வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்துள்ளது.

சீனாவுக்கு அனுப்ப தயாராக இருந்த அமெரிக்க ஈத்தேன் கப்பல் இந்தியாவுக்கு திருப்பிவிடுவதற்கு தயாராகி வருகிறது. தற்போது, STL Qianjiang என்ற எரிவாயு கப்பல் அமெரிக்காவின் கல்ஃப் கோஸ்ட் பகுதியிலிருந்து குஜராத்தின் தாஹேஜ் துறைமுகத்தில் உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முனையத்திற்கு ஈத்தேனை ஏற்றிக்கொண்டு வருகிறது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஈத்தேன் கிராக்கர் (ethane cracker) மூலம் இதை எத்திலீனாக (ethylene) மாற்றப்படுகிறது, இது பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்ய முக்கியமான மூலப்பொருளாகும். சரி, ஏன் இந்த ஈத்தேன் மிகவும் ஸ்பெஷலாக பார்க்கப்படுகிறது.
ரிலையன்ஸ் உள்ளிட்ட பல பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனங்கள், கச்சா எண்ணெயை-ல் (crude oil) இருந்து தயாரிக்கப்பட்ச நாப்தாவை (naphtha) பயன்படுத்தி எத்திலீனை உற்பத்தி செய்து வருகிறது. ஆனால், நாப்தாவைப் பயன்படுத்தி எத்திலீனை உற்பத்தி செய்யும் போது இதன் மாற்று விகிதம் அதாவது உற்பத்தி விகிதம் வெறும் 30% மட்டுமே.
அதேசமயம் ஈத்தேனைப் பயன்படுத்தி எத்திலீன் உற்பத்தி செய்யும் போது இதன் உற்பத்தி விகிதம் 80% ஆக உயர்கிறது. மேலும், ஈத்தேன் விலை நாப்தாவை விட 50 சதவீதம் குறைவான விலையில் கிடைப்பதால், இதன் செலவும் குறைகிறது. இந்த ஈத்தேன் சப்ளை இந்தியாவின் பிளாஸ்டிக் மற்றும் பிற பொருட்களின் உற்பத்தியை மேம்படுத்தும். மேலும் ரிலையன்ஸின் லாப அளவுகளை உயர்த்த முக்கிய காரணமாக இருக்கப்போகிறது.
டிரம்பின் வர்த்தகப் போரின் ஒரு பகுதியாக சீனாவுக்கு எதிராக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால், அமெரிக்காவின் ஈத்தேன் ஏற்றுமதி இந்தியாவுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது. இந்த மாற்றம், இந்தியாவின் பொருளாதாரத்திற்கு ஒரு புதிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தி, உலகளாவிய பிளாஸ்டிக் உற்பத்தி சந்தையில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்த வாய்ப்பை பெற்றுள்ளது. இதேபோல் அமெரிக்கா தொடர்ந்து இந்தியாவுக்கு ஈத்தேன் ஏற்றுமதி செய்யுமா என்பது தற்போது முக்கியமான கேள்வியாக உள்ளது.


Click it and Unblock the Notifications