தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டின் முக்கிய இலக்கே தமிழ்நாடு முழுவதும் வளர்ச்சியை விநியோகிக்கப்பட வேண்டும் என்பது தான். தொழில் வளர்ச்சி பெரும்பாலும் சென்னை மற்றும் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் பகுதிகளுக்குள்ளேயே முடங்கிவிடுகிறது, இதை மற்ற மாவட்டங்களுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதே முக்கிய இலக்காக இருந்தது.
இந்த இலக்கை மிகவும் சிறப்பாக அடைந்துள்ளது தமிழ்நாடு அரசு, சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் அதிகப்படியான முதலீடுகள் குவிந்திருந்தாலும். தென்மாவட்டங்களில் அதிகப்படியான முதலீடுகள் வந்துள்ளது, குறிப்பாகத் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் பெருமளவிலான முதலீடுகள் குவிந்துள்ளது.

இதனால் இந்த முதலீடுகள் பலன் அளிக்கும் போது வெளியூர், வெளி மாவட்டத்தில் இருக்கும் மக்கள் சொந்த ஊரிலேயே கைநிறைய சம்பளத்தில் வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் சொந்த ஊருக்கு வர காத்திருக்கும் மக்களுக்கு தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் வந்த முதலீடுகளின் பட்டியல், இதோ..
வியட்நாம் நாட்டின் வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் சுமார் 2 பில்லியன் டாலர் முதலீட்டில் அதாவது 16000 கோடி ரூபாய் முதலீட்டில் மெகா எலக்ட்ரிக் வாகன தொழிற்சாலையும், பேட்டரி தொழிற்சாலையும் அமைக்க உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக அரசிடம் சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்தானது.
இதேபோல் 12,000 கோடி முதலீட்டில் JSW குழுமம் புதுப்பிக்கத்தக்க எனர்ஜி துறையில் தற்போதைய கட்டமைப்பைத் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் விரிவுபடுத்த உள்ளது. இந்த முதலீட்டின் மூலம் 6000 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது.
தூத்துக்குடியில் அடுத்த 2 ஆண்டுகளில் 1,900 கோடி ரூபாய் முதலீடு செய்ய SPIC குழுமம் தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டில் உறுதியளித்துள்ளது. இந்த 1900 கோடி ரூபாய் முதலீட்டில் பெரும் பகுதி சென்னையிலும் SPIC நிறுவனம் செய்கிறது.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 300 மெகாவாட் சோலார் மற்றும் 200 மெகாவாட் காற்றாலை திட்டங்களை அமைக்க உள்ளது டெல்லியை சேர்ந்த சன்ஷூர் எனர்ஜி நிறுவனம். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் உடன் திருச்சி, கரூர் மற்றும் தேனி ஆகிய மாவட்டத்தில் இந்தச் சோலார் மற்றும் காற்றாலை திட்டங்கள் அமைக்க 3,150 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் செய்யப்பட முடிவு செய்து, தமிழக அரசிடம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
மேலும் லீப் கிரீன் எனர்ஜி ஒருங்கிணைந்த கிரீன் ஹைட்ரஜன் மின் சேமிப்பு ஆலையை அமைக்கத் தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.17,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. இந்த முதலீட்டின் மூலம் 3,300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
கடைசியாகச் சிங்கப்பூரைச் சேர்ந்த செம்கார்ப் 36,238 கோடி முதலீட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் கிரீன் ஹைட்ரஜன் ஆலையை அமைக்க உள்ளது. இந்த முதலீட்டின் மூலம் 1511 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications