தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக தனிப்பெரும் கட்சியாக வென்றது.108 இடங்களில் வெற்றி பெற்றாலும் காங்கிரஸ், இடதுசாரிகள் , விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. விஜய் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பிலும் பெரும்பான்மையை தவெக நிரூபித்தது.
இந்த தேர்தலில் திமுக 59 இடங்களில் மட்டுமே வென்ற நிலையில், எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது. ஸ்டாலின் தன்னுடைய சொந்த தொகுதியான கொளத்தூரிலேயே தோற்கடிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்க திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், தவெக ஆட்சி எந்த நேரத்திலும் கவிழலாம் என்று பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட செயலாளர்களிடம் பேசிய ஸ்டாலின், "ஒரு தேர்தலில் தோற்றாலும் மறு தேர்தலில் வென்று காட்டியிருக்கிறோம். நம்பிக்கையோடு பணியாற்றுங்கள் என்றார். மேலும் இந்த ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழும், தயாராக இருங்க 2029 நாடாளுமன்ற தேர்தல் வரும் போது தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்தல் வர வாய்ப்பு இருக்கிறது என கூறியுள்ளார். திட்டமிடுவோம் தீவிரமாக உழைப்போம் என கூறியுள்ளார்.
முன்னதாக தவெக ஆட்சி அமைக்க முயற்சி செய்து கொண்டிருந்த சமயத்தில் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஸ்டாலின், திமுக எதிர்க்கட்சி வரிசையில் அமரும் என்றும் ஆறு மாதங்களுக்கு தவெக ஆட்சியை கவனிப்போம் எனக் கூறியிருந்தார். இதற்கிடையில் தான் திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த சூழலில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் தவெக ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என கூறி இருப்பதும், திமுக கூட்டணி கட்சிகள் தவெக ஆட்சிக்கு ஆதரவு தந்துள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறி இருப்பதும் விவாத பொருளாகியுள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் கட்சிக்கு மெஜாரிட்டி இல்லை என்றாலும் நம் கூட்டணி கட்சிகளை வைத்தும் அதிமுகவை உடைத்தும் பெரும்பான்மையை நிரூபித்துள்ளனர் என பேசி இருக்கும் ஸ்டாலின், தோல்வியை நினைச்சு யாரும் வருத்தப்பட வேண்டாம். இந்த தோல்வி தற்காலிகம்தான். மீண்டும் வருவோம்.. வெற்றி பெறுவோம் என கூறினார். மாவட்ட செயலாளர் துவண்டு போகாமல் இருக்க நம்பிக்கை கொடுக்கும் வகையில் ஸ்டாலின் இவ்வாறு பேசினாரா அல்லது அவர் கூறுவதை போலவே ஆட்சி கவிழுமா என்ற விவாதம் எழுந்திருக்கிறது.
முன்னதாக சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தவகெ , காங்கிரஸ் 05, கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 2, விசிக 2 மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2 என மொத்தம் 119 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கிடைத்தது. அதிமுகவில் சிவி சண்முகம் தலைமையிலான எம்.எல்.ஏக்கள் 25 பேர் ஆதரவாக வாக்களித்ததனர். இதனால் தவெகவின் பலம் 144 ஆக உயர்ந்தது. எதிர்ப்பு வாக்குகள் 22ஆகவும், நடுநிலை 5 வாக்குகளும் கிடைத்தன. பெரும்பான்மைக்கு 118 தேவை என்ற நிலையில் தவெக அரசுக்கு கூடுதல் பெரும்பான்மை கிடைத்துள்ளது. எனவே பிரிந்து நிற்கும் அதிமுகவினர் தவெகவில் இணைந்தால் தவெக பலம் நிலைத்து நிற்கும்.


Click it and Unblock the Notifications

