தஞ்சை: சேலம், வேலூரை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று தஞ்சாவூரில் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். பச்சை துண்டு அணிந்து மேடையில் அவர் உரையாற்றினார். அப்போது அவர் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒருபுறம் அதிமுக கூட்டணியும் மறுபுறம் திமுக கூட்டணியும் தேர்தல் வாக்குறுதிகளை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். இந்நிலையில் தவெக தலைவர் விஜய்யின் தஞ்சை கூட்டம் முக்கியத்துவம் பெற்றது. இந்த கூட்டத்தில் விவசாயிகளுக்கான பிரத்தியேக அறிவிப்புகளை விஜய் வெளியிட்டார்.

அப்போது, விவசாயத்தைப் பற்றி எனக்குத் தெரியாது என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன், ஆனால், விவசாயிகள் படும் கஷ்டம் குறித்து எனக்குத் தெரியும், அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் விவசாயிகளுக்கு மகனாகப் பிறக்க ஆசைப்படுகிறேன் என தெரிவித்தார். நான் டெல்டாக்காரன் என்று கூறி உங்கள் காதுகளில் டால்டா ஊற்ற மாட்டேன் என பேசிய விஜய், மீண்டும் முதல்வராக வருவோம் என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார் ஆனால், வரலாற்றிலேயே திமுக இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது கிடையாது அது, அவர் அப்பாவாலேயே முடியவில்லை என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ள சிறு விவசாயிகள் வாங்கிய பயிர் கடனை முழுமையாக ரத்து செய்ய சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து உறுதியான முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதேபோல, 5 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர் கடனில் 50 சதவீதம் ரத்து செய்ய உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
விவசாயிகளின் விருப்பத்திற்கு எதிராக எந்த திட்டமாக இருந்தாலும், ஒன்றிய அரசின் அழுத்தம் இருந்தாலும், அதை தவெக ஆட்சி முழுமையாக நிராகரிக்கும் என்ற அவர் எப்போதும் விவசாயிகளின் பக்கமே தவெக நிற்கும் என்றார். நெல் கொள்முதல் நிலையங்களில், முறையாக நெல் மூட்டைகள் பாதுகாக்கப்படும். நெல் கொள்முதல் செய்வதற்கோ, மூட்டை ஏற்றி இறக்கவோ ஒரு பைசா கமிஷன் வாங்காமல் பார்த்துக்கொள்ளப்படும் என்றார்.


Click it and Unblock the Notifications