உலகளவில் ஆட்டோமொபைல் துறை வேகமாக மாறி வரும் வேளையில், இந்தியாவிலும் இதன் தாக்கம் எதிரொலித்துள்ளது என்றால் மிகையில்லை. ஏற்கனவே ICE இன்ஜின் வாகனங்கள், எலக்ட்ரிக் வாகனங்கள் மத்தியிலான மாற்றம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் வேளையில், சீன ஆட்டோமொபைல் நிறுவனங்களின் எழுச்சி உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இருசக்கர வாகனத் துறையில் நீண்டகாலமாக முன்னணியில் இருந்த ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், தற்போது மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இதேபோல் கார் விற்பனை எப்போதும் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் மாருதி சுசூகி தனது ஆதிக்கத்தை இழக்க துவங்கியுள்ளது.

இந்தியாவில் இருசக்கர வாகன தயாரிப்பிலும், விற்பனையிலும் முன்னோடியாக இருக்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு பிப்ரவரி மாதம் சற்று மோசமான வர்த்தக காலமாகவே உள்ளது. இதேவேளையில் தமிழ்நாட்டை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அதிகப்படியான வாடிக்கையாளர்களை கவர்ந்து விற்பனையை அதிகரித்து பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.
பிப்ரவரி 2025 மாத இருசக்கர வாகன விற்பனை புள்ளிவிவரங்களின்படி, டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 4,03,976 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் செய்யப்பட்ட விற்பனையை காட்டிவும் 9.6% அதிகமாகும்.
இக்காலக்கட்டத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 3,88,068 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 17.2% குறைவாகும். பிப்ரவரி மாத விற்பனையில் டிவிஎஸ் பெரும் வளர்ச்சியை காண்டு 3வது இடத்தில் இருந்து 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
முதலீடத்தில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்திடம் தான் ஹீரோ தனது முதலிடத்தை இழந்துள்ளது. ஹோண்டா பிப்ரவரி மாதம் 4,22,449 வாகனங்களை விற்பனை செய்துள்ளது, இது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் செய்யப்பட்ட விற்பனையை காட்டிலும் 7.9 சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
டிவிஎஸ் நிறுவனத்திற்கு இது ஒரு வரலாற்று சாதனை என்றால் மிகையில்லை, முதல் முறையாக 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதேபோல் முதல் முறையாக ஹீரோவை முந்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய இருசக்கர வாகன சந்தையில் இந்த மாற்றம் ஒரு புதிய ஆதிக்க பாதையின் தொடக்கமாக கருதப்படுகிறது. இதேபோல் 4வது இடத்தில் பஜாஜ் நிறுவனம் இருக்கிறது.
இன்றைய வர்த்தகத்தில் டிவிஎஸ் நிறுவன பங்குகள் 2.10 சதவீத உயர்வில் 2,343.70 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. 2025 ஆம் ஆண்டு துவக்கத்தில் இருந்து அதிகப்படியான சரிவை சந்தித்து வந்த டிவிஎஸ் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் பதிவு செய்துள்ள உயர்வு முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் ஆக அமைந்துள்ளது.
டிவிஎஸ் போலவே பஜாஜ் ஆட்டோ பங்குகள் 0.32 சதவீதமும், ஹீரோ மோட்டோகார்ப் 1.93 சதவீதம் உயர்வில் உள்ளது.


Click it and Unblock the Notifications