இந்தியாவின் புகழ்பெற்ற டிவிஎஸ் மோட்டார் கம்பெனி தனது உற்பத்தி திறனை மேம்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக ஒரு பெரிய உற்பத்தி ஆலையை கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பல்வேறு பிரிவுகளில் அதிகரித்து வரும் வாகன தேவையை பூர்த்தி செய்யும் வகையில், அடுத்த 12 மாதங்களில் தனது உற்பத்தி திறனை கணிசமாக உயர்த்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதாவது அடுத்த ஆண்டிற்குள் தனது வருடாந்திர உற்பத்தி திறனுடன் கூடுதலாக 15 லட்சம் யூனிட்டுகளை சேர்க்க டிவிஎஸ் முடிவு செய்துள்ளது. டிவிஎஸ் நிறுவனத்தின் காலாண்டு நிதிமுடிவுகள் வெளியீட்டுக்கு பிறகு பேசிய தலைமை நிர்வாக அதிகாரி கே.என். ராதாகிருஷ்ணன், இந்த புதிய விரிவாக்க திட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த உற்பத்தி திறனை ஆண்டுக்கு சுமார் 83 லட்சம் யூனிட்டுகளாக உயர்த்துவதே நிறுவனத்தின் இலக்கு என தெரிவித்தார்.

இந்த விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களை உற்பத்தி செய்வதற்காகப் புதிய ஆலை ஒன்றை அமைப்பது குறித்தும் நிறுவனம் பரிசீலித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஓசூரில் இதனை அமைக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என அவர் கூறினார். ஓசூரில் நீலமங்கலம் பகுதியில் உள்ள புரோலோகில் பார்க்கில் ஆலை அமைக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
2026ஆம் நிதியாண்டில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 59 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்துள்ளது. மேலும், மின்சார வாகனத் துறையில் தொடர்ந்து வலுவான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது என குறிப்பிட்ட அவர், தற்போது மின்சார வாகன உற்பத்தியை மாதத்திற்கு சுமார் 40,000 யூனிட்டுகளாக உயர்த்தி இருக்கிறோம் இதனை மேற்கொண்டு மாதந்தோறும் 50,000 யூனிட்டுகளாக அதிகரிக்க திட்டமிட்டு இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
டிவிஎஸ் நிறுவனத்தின் ஓசூர் ஆலை தொடர்ந்து டிவிஎஸ் நிறுவனத்தின் முக்கிய மையமாக விளங்கும் என கூறியுள்ள அவர் எதிர்காலத்தில் நார்டன் (Norton) மோட்டார் சைக்கிள்களை இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு தயாரிப்பதில் ஓசூர் ஆலை இன்னும் முக்கிய பங்காற்றும் என உறுதிப்படக் கூறியுள்ளார்.
தயாரிப்பு மேம்பாடு, உற்பத்தி விரிவாக்கம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பணிகளுக்காக 2027ஆம் நிதியாண்டிற்கு சுமார் 3,500 கோடியை மூலதன செலவாக டிவிஎஸ் ஒதுக்கியுள்ளது. இந்தியாவில் அண்மை காலமாக மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரித்து வருவதால் பல நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு மின்சார வாகன தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக இரண்டு சக்கர, மூன்று சக்கர வாகனங்களுக்கு பெயர் போன டிவிஎஸ் நிறுவனம் மின்சார வாகன சந்தையை கைப்பற்றுவதில் மிக தீவிரமாக உள்ளது.
சென்னையை தலைமையிடமாக கொண்ட டிவிஎஸ் நிறுவனம் ஏற்கனவே ஓசூர், மைசூரு மற்றும் தலகாரா என இந்தியாவில் மூன்று ஆலைகளையும் இந்தோனேசியாவில் ஒரு உற்பத்தி ஆலையையும் கொண்டுள்ளது. இதில் ஓசூர் ஆலை தான் அனைத்திற்கும் முன்னோடி, தற்போது கூடுதலாக புதிய ஆலையை அமைக்க இருப்பது ஓசூர் அடித்த ஜாக்பாட்.


Click it and Unblock the Notifications


