வாசிங்டன், அமெரிக்கா: கடந்த புதன் கிழமை (அக்டோபர் 30, 2019) அன்று ட்விட்டர் ஒரு அதிரடி முடிவை எடுத்து இருக்கிறது. இனி ட்விட்டர் சமூக வலைதளத்தில், உலகம் முழுக்க எந்த நாட்டில் இருந்தும், அரசியல் விளம்பரங்களை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனச் சொல்லி இருக்கிறார்கள்.
ஏன் இந்த திடீர் முடிவு எனக் கேட்டால், சமூக வலைதளன்களில், அரசியல்வாதிகள் பற்றிய தவறான தகவல்கள் பரவுவதைக் காரணமாகச் சொல்லி இருக்கிறார்கள்.

இந்த அரசியல் விளம்பர தடையை, ட்விட்டர் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி ஜாக் டார்சி (Jack Dorsey)-யும் உறுதி செய்து இருக்கிறார். அதோடு ட்விட்டர் வலைதளத்தில் பரவும் அரசியல் கருத்துக்களுக்கான ஆதரவு தானாக வர வேண்டும். இந்த அரசியல் கருத்துக்கு விலை பேசப்படக் கூடாது எனச் சொல்லி இருக்கிறார்.
ஒரு அரசியல் கருத்து, அதை வெளியிட்டவரின் ட்விட்டர் கணக்கை பின் தொடர்வதாலும், ரீ ட்விட்டுகள் செய்யப்படுவதாலும் தான் அதிக அளவில் பரவுகிறது. இப்போது விலை கொடுத்து விளம்பரம் செய்வதை நிறுத்துவதால், அரசியல் கருத்து திணிப்புகள் பெரிய அளவில் குறையும். இந்த அழுத்தமான தீர்மானங்கள் பணத்துக்காக விட்டுக் கொடுத்துவிடக் கூடாது எனச் சொல்லி இருக்கிறார்.
இணைய விளம்பரங்களுக்கு என்று ஒரு பெரிய சக்தி இருக்கிறது. இது வணிக ரீதியில் பெரிய அளவில் செயல்படுத்தப்பட்டு நல்ல பலன்களும் கிடைக்கின்றன. ஆனால் இதே போல அரசியல் கருத்துகளுக்குச் செய்யும் போது அது அரசியலுக்கே பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடலாம். இந்த அரசியல் கருத்து விளம்பரங்களால், ஒருவர் யாருக்கு வாக்கு செலுத்த வேண்டும் என்பதைக் கூட தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது.
இப்போது உலகின் சமூக வலைதளங்கள் பட்டியலில், முன்னணியில் இருக்கும் ட்விட்டரே இப்படி அரசியல் விளம்பரங்களுக்கு நோ சொல்லி இருப்பதால், ஃபேஸ்புக் போன்ற மற்ற முன்னணி சமூக வலைதளங்களும் தங்கள் தளங்களில் பதிவிடும் அரசியல் வாதிகள் தொடர்பாக செய்திகளையும் விளம்பரங்களையும் சரி பார்க்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
இந்த புதிய விளம்பர கொள்கைகள் தொடர்பான முழு விவரங்கள் அடுத்த மாதம் வெளியிடப்படும் எனவும் சொல்லி இருக்கிறார் ட்விட்டரின் முதன்மைச் செயல் அதிகாரி ஜாக் டார்சி.


Click it and Unblock the Notifications