உலகின் பிரபல சமூக வலைதள நிறுவனமான ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்தே, ட்விட்டர் பற்பல அதிரடியான மாற்றங்களை கண்டு வருகிறது. ஏராளமானோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இன்னும் என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறாரே எலான் மஸ்க் எனும் அளவுக்கு, அதிரடியாக ஒவ்வொரு அறிவிப்பும் வந்து கொண்டுள்ளது.
குறிப்பாக ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்தே அதிருப்தியான நிலையே இருந்து வருகின்றது. தலைமை செயல் அதிகாரி உட்பட கிட்டதட்ட பாதி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இருந்தா இருங்க இல்லாட்டி போங்க
மேலும் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்க முடியாது. அலுவலகம் வந்து வேலை பாருங்கள். அதேபோல நீண்ட நேரம் பணியாற்ற வேண்டும் என்றும் ஊழியர்களுக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. மொத்தத்தில் விருப்பம் இருந்தால் இருக்கலாம். இல்லையெனில் வெளியே போய்க் கொள்ளலாம் என்பது போல, எலான் மஸ்கின் கருத்துகள் வெளி வந்தன.

பலரும் ராஜினாமா?
இதற்கிடையில் எலான் மஸ்கின் இந்த அதிரடியான நடவடிக்கைகளுக்கு மத்தியில், நீங்க என்ன எங்களை பணி நீக்கம் செய்வது? நாங்களே வெளியே செல்கிறோம் என்பது போல மிகப்பெரிய அளவிலான ஊழியர்கள் தாங்களாகவே முன் வந்து தங்களது வேலையினை ராஜினாமா செய்து வருகின்றனராம்.

கெடு விதித்த எலான்
இன்னும் ஏராளமானவர்களும் தங்களது பணியினை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளனராம். குறிப்பாக எலான் மஸ்க் ஊழியர்களுக்கு அனுப்பிய மெயில் ஊழியர்கள் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டுமா? அல்லது 3 மாத சம்பளத்துடன் துண்டிக்கப்பட வேண்டுமா? என்றும் 2 நாள் கெடுவை விதித்திருந்தார்.

கடும் அதிருப்தி
எலான் மஸ்கின் இந்த செயல் ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியினையும், சல சலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பற்பல கடுமையான நடவடிக்கைகளுக்கு மத்தியில் ஊழியர்கள் மத்தியில் ஒருவித ஆர்வமின்மை இருந்த நிலையில், தங்களுடன் பணிபுரிந்த உயர் அதிகாரிகள் முதல் பலரும் இல்லை என்பதும், பல முக்கிய பொறுப்புகளில் ஆட்கள் இல்லை என்பதும் அவர்களின் பணியினை இன்னும் கடினமாக்கியுள்ளது.

ராஜினாமா செய்ய முடிவு
ராய்ட்டர்ஸ் அறிக்கையின் படி 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ட்விட்டரை விட்டு வெளியேற தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது எலான் மஸ்க் நீண்ட நேரம் பணியாற்றி ஆக வேண்டும், இல்லை உங்களால் முடியாது எனில் வெளியேறலாம் என்று கூறிய நிலையில் வந்துள்ளதாகவும் சுட்டிக் காட்டியுள்ளது.

42% விருப்பம் இது தான்
இது குறித்து நடத்தப்பட்ட கருத்து கணிப்பில், சுமார் 42% பேர் நிறுவனத்தினை விட்டி வெளியேற தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வில் 180 பேர் கருத்து கணிப்பில் கலந்து கொண்டதாகவும் தெரிய வந்துள்ளது.

அலுவலகங்கள் தற்காலிகமாக மூடல்
ட்விட்டர் அலுவலகங்கள் பல தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பெரும்பாலான அலுவலகங்கள் திங்கடகிழமை திறக்கப்படலாம் என தெருகின்றது. பல புதிய மாற்றங்களுடன் திங்கட்கிழமை முதல் அலுவலகங்கள் தொடங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்ததில் பற்பல புதிய மாற்றங்களுடன் புதியதொரு ட்விட்டராக திங்கட்கிழமை முதல் ட்விட்டர் பொலிவு பெறலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.