எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்து ஏராளமான மாற்றங்கள் மற்றும் புது மாற்றங்களை அறிவித்து வருகின்றார்.
உலகம் முழுவதும் ட்விட்டரில் பணியாற்றி வரும் எலான் மஸ்க், அதில் பணியாற்றி வந்த ஏராளமான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளார்.
கிட்டதட்ட 50% ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் ஒட்டுமொத்த விளம்பர குழுவும் நீக்கப்பட்டுள்ளனர்.
ஏராளமானவர்கள் பணி நீக்கம்
இந்தியர்களில் பொறியியல், ப்ராடக்ட் மற்றும் தகவல் தொடர்பு துறைகளில் பணியாற்றி வந்த ஏராளமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உலகளவில் நிறுவனம் மறுசீரமைக்கப்பட்டு வருவதால், ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திங்கள் கிழமை முதல் பணிக்கு வர வேண்டாம் என்று, ட்விட்டர் தனது ஊழியர்களுக்கு மெயில் மூலம் தகவலை கொடுத்துள்ளது.
ஹெச் 1 பி விசா மூலம் பணி செய்பவர்களுக்கு பிரச்சனை
சர்வதேச அளவில் மிகப்பெரிய அளவில் பணி நீக்கம் செய்துள்ளது ட்விட்டர். குறிப்பாக ஹெச் 1 பி விசா மூலம் பணி புரிந்து வரும் சில ஊழியர்கள் இந்த பணி நீக்க பட்டியலில் இருப்பதாகவும், அவர்களுக்கு 60 நாள் காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அவர்களின் குடியேற்றம் என்பது சிக்கலுக்குள்ளாகியுள்ளதாக தெரிகிறது.
அமெரிக்கா விசா மூலம் பணி
ட்விட்டர் ஊழியர்களில் பலர் அமெரிக்காவின் ஹெச் 1 பி விசா, எல் 1 விசா உள்ளிட்ட பல விசாக்கள் மூலம் பணி புரிந்து வருகின்றது. இந்த ஊழியர்களுக்கு 60 நாள் காலக்கெடுவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக தற்போது 60 நாட்களுக்குள் ஊழியர்கள் மாற்று வேலையினை தேட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் எனலாம்.
அமெரிக்காவினை விட்டு வெளியேறணுமா?
60 நாட்களுக்குள் ஊழியர்கள் மாற்று வேலை தேடிக் கொள்ளாவிட்டால், அவர்கள் அமெரிக்காவினை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்படலாம். ஹெச் 1 பி விசா வைத்துள்ள ட்விட்டர் ஊழியர்களில் 625 - 670 ஊழியர்கள் அல்லது 8% இருப்பதாகவும் தெரிகிறது. ட்விட்டரில் தற்போது மொத்தமாக 7500 ஊழியர்கள் உள்ளனர். முன்னதாக ட்விட்டர் ஊழியர்களில் 50% பணி நீக்கம் செய்யப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில், அதில் எத்தனை வெளிநாட்டு ஊழியர்கள் என்பது குறித்தான தகவல்கள் வெளியாகவில்லை.
இந்திய ஊழியர்களுக்கு தான் பாதிப்பா?
பொதுவாக அமெரிக்காவில் உள்ள ஹெச் 1பி விசா மற்றும் எல் 1 பி விசா மூலம் அதிகளவில் பயன்பெறுவது இந்திய ஊழியர்கள் தான். ஆக இதன் மூலம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதும் இந்திய ஊழியர்கள் தான் அதிகமாக இருக்கும் என தெரிகிறது. எனினும் இது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications