சமுக வலைத்தள நிறுவனங்கள் அனைத்தும் அதிகளவிலான வர்த்தக இழப்பையும், பாதிப்பையும் எதிர்கொண்டு வரும் வேளையில் இத்துறையை தலைகீழாக மாற்ற திட்டமிட்டு உள்ளது X Corp. இது என்ன புதிய நிறுவனமா என்று குழம்ப வேண்டாம், உலகின் இரண்டாவது பெரிய பணக்காரரான எலான் மஸ்க் டிவிட்டர் தளத்தை தற்போது X Corp நிறுவனத்தின் கீழ் தான் சேர்த்துள்ளார்.
டிவிட்டர் தளத்தை ஒரு சூப்பர் ஆப் ஆக மாற்றும் திட்டத்துடன் எலான் மஸ்க் X Crop கீழ் சேர்த்துள்ளார். இதற்கான மாற்றங்களையும், அடுத்த 5 வருடத்திற்கான ரோடுமேப் உருவாக்கியும், அதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிட்ட பின்பு தான் சிஇஓ பதவியை லிண்டா யாக்காரினோ-விடம் கொடுத்துள்ளார்.

இன்று சந்தையில் இருக்கும் பல தளத்தில் இருக்கும் சேவைகளை ஒரே தளத்தில் கொண்டு வரும் திட்டத்தை தான் தற்போது கையில் எடுத்துள்ளார் எலான் மஸ்க். சமுக வலைத்தளத்தின் வெற்றியும் திறனும் நாம் செய்யும் பதவிகளை நம்முடைய பாலோவர்களுக்கு எவ்வளவு வேகமாக காட்டுகிறது என்பதில் தான் உள்ளது. இதில் கிட்டத்தட்ட பாதி கிணற்றை தாண்டிய எலான் மஸ்க், தற்போது டெக்ஸ்ட், போட்டோ, சிறிய வீடியோ பதிவுகளில் பெரிய மாற்றத்தை செய்துள்ளார்.
இதை தொடர்ந்து வீடியோ சேவை பிரிவில் பெரிய மாற்றத்தை செய்யும் நோக்கில் எலான் மஸ்க் டிவிட்டரில் ப்ளூ டிக் பெற்றவர்களுக்கு தற்போது 2 மணிநேரம் வரையிலான வீடியோ-வை அப்லோட் செய்யும் வசதியை கொடுத்துள்ளார். ஆனால் யார் 2 மணிநேரம் வீடியோ பார்ப்பார்கள் என்ற கேள்வி இருந்தாலும் யூடியூப் மூவிஸ், நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் ஆகியோருக்கு இது பெரும் போட்டியாக இருக்கும்.
இந்த சேவை மூலம் உலகளவிலான ஒரு OTT தளத்திற்கு அடித்தளமாக கூட இருக்கலாம் எனவும் பலராலும் பேசப்பட்டு வந்தாலும், இதற்கான விளம்பர வருவாய், சப்ஸ்கிரிப்ஷன் மாடல் என பல கேள்விகள் உள்ளது. ஆனால் மைக்ரோ பிளாகிங் சமுக வலைத்தளமாக மட்டுமே இருந்த டிவிட்டர் பல முனையில் மக்களை இணைக்கும் மாபெரும் தளமாக மாறியுள்ளது மறுக்க முடியாது.
இதுமட்டும் அல்லாமல் விரைவில் டிவிட்டரில் உலகம் முழுவதிலும் இருக்கும் மக்களிடம் வாய்ஸ் கால், வீடியோ கால் செய்யும் சேவையை கொண்ட வர உள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் யாரிடமும் நம்முடைய போன் நம்பரை பகிர தேவையில்லை எனவும் எலான் மஸ்க் தெரிவித்தார்.



Click it and Unblock the Notifications