ட்விட்டரை எலான் மஸ்க் கையகப்படுத்தியதில் இருந்து அடுத்து என்ன நடக்குமோ என்ற பரபரப்பான சூழலே இருந்து வருகின்றது.
பணி நீக்கம் தொடங்கி பற்பல அதிரடியான மாற்றங்களை செய்து வருகின்றது. சமீபத்திய தகவல்கள் படி ட்விட்டர் நிறுவனம் அதன் அலுவலகத்திற்கு கூட வாடகை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
இது ட்விட்டரின் எதிர்காலம் குறித்த கவலையை அதன் ஆர்வலர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
அலுவலகத்தில் உறக்கம்
சர்வதேச அளவில் மிகப்பெரிய ஜாம்பவான் ஆக இருந்து வரும் ட்விட்டர் நிறுவனத்தினை எலான் 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்கினார். வாங்கிய கையோடு பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்தார். ட்விட்டரை சரி செய்யும் வரையில் அலுவலகத்தில் தான் உறக்கம் என கூறி அலுவலகத்திலேயே தங்கியுள்ளார்.
கிறுக்குத்தனமான நடவடிக்கைகள்
ஆரம்பத்தில் ட்விட்டரை கையகப்படுத்திய கையோடு ட்விட்டரில் பல கிறுக்குத்தனமான நடவடிக்கைகள் இருக்கும். அவை சரி வந்தால் அப்படியே விட்டுவிடுவோம். இல்லையெனில் அதனை விரைவில் மாற்றுவோம் என கூறியிருந்தார். அவர் கூறியதை போலவே அவ்வப்போது ஒவ்வொரு அறிவிப்பாக வெளி வண்ணம் உள்ளது.
வாடகை கூட கொடுக்கலையா?
ட்விட்டரின் சான் பிரான்சிஸ்கோ மற்றும் பல பகுதிகளில் உள்ள அலுவலகங்களுக்கு வாடகை கொடுக்கப்படவில்லை என தெரிகிறது. இது குறித்து வாடகை பணம் கொடுக்க வேண்டாம் என ட்விட்டர் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது சமீபத்தில் ட்விட்டரில் பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்த நிலையில் இத்தகைய அறிவிப்பு வந்துள்ளது.
சர்ச்சை
ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு சரியான அறிவிப்பு ஏதும் வரவில்லை. அவர்களுக்கு சரியாக சம்பளம் கொடுக்கப்படவில்லை. இது அமெரிக்க சட்டங்களை மீறும் செயல் என்ற சர்ச்சை எழுந்தது. ஊழியர்கள் பணி நீக்கம் முன்பு, 60 நாட்களுக்கு முன்பே அறிவிப்பை கொடுக்க வேண்டும். அதோடு ஊழியர்களுக்கு 60 நாட்கள் சம்பளமும் கொடுக்கப்பட வேண்டும். அதோடு அபராதமும் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்
பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு இழப்பீடுகளை கொடுக்காத சூழலில் இத்தகைய அறிவிப்புகள் வெளியாகியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நிறுவனம் அலுவலகங்களில் குத்தகை குறித்தான ஒப்பந்தங்களை பரிசீலிக்கலாம் என தெரிகிறது. இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என தெரிகிறது.
ஏலத்தில் விட திட்டம்
கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் எலான் மஸ்க் நிறுவனத்தை எடுத்துக் கொண்டபோது, எடுக்கப்பட்ட தனியார் விமானங்களுக்கு செலுத்த வேண்டிய பில்களை கொடுக்க மறுத்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது மட்டும் அல்ல, ட்விட்டர் அலுவலகத்தில் உள்ள சில பொருட்கள் ஏலத்தில் விடப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
என்னென்ன பொருட்கள் ஏலம்
இந்த ஏலத்தில் ட்விட்டரில் உள்ள ப்ரொஜெக்டர்கள், ஐமேக் டிஸ்பிளே, காபி இயந்திரங்கள், நாற்காலிகள் மற்றும் பிரிட்ஜ், பீட்சா மேக்கர் போன்ற சமையலறை பொருட்கள் ஏலம் விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சுமார் 1 பில்லியன் டாலர்கள் அளவுக்கான செலவுகளை குறைக்க வேண்டும் என எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவன குழுவினரிடம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் தான் இத்தகைய அறிவிப்புகள் வெளியாகிய வண்ணம் உள்ளது.


Click it and Unblock the Notifications