உலகின் மிகப்பெரிய பில்லியனரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தினை வாங்கிய நிலையில், கிட்டத்தட்ட அதன் ஊழியர்கள் பாதிக்கும் மேற்பட்டோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுவே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது பணி நீக்கம் செய்த ஊழியர்கள் சிலரை ட்விட்டர் திரும்ப அழைத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அமெரிக்காவின் சான் பிராஸ்சிஸ்கோவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ட்விட்டர் நிறுவனம், பயனர்கள் மத்தியில் பயன்படுத்தப்படும் விருப்பமான சமூக வலைதளங்களில் ஒன்றாக உள்ளது.
இந்த நிறுவனத்தில் மொத்தம் 7500 பேர் பணி புரிந்து வந்த நிலையில், அவர்களில் பாதி ஊழியர்கள் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சட்டத்தை மீறிய செயல்
எனினும் இந்த பணி நீக்க செயலானது சட்டத்தினை மீறும் ஒரு செயல் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்காவில் ஃபெடரல் தொழிலாளர் சட்டமானது 100 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களை கொண்ட வணிகங்கள் பெருமளவிலான பணி நீக்கங்களில் ஈடுபவதற்கு முன்பு 60 நாட்கள் கால அவகாசத்தினை வழங்க வேண்டும் என்பது தான். இதன் மூலம் 60 நாட்கள் பணி நீக்க சம்பளத்தினை வழங்க வேண்டும் என்பது நடைமுறை.
ட்விட்டர் மீது வழக்கு
இதற்கிடையில் தான் கடந்த வாரத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் மீது வழக்கும் தொடரப்பட்டுள்ளது. ட்விட்டரின் புதிய நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளோடு, சம்பள வங்கிக் கணக்குகளையும் முடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தினை கடந்த மாத மத்தியில் 44 பில்லியன் டாலருக்கு கையகப்படுத்தினார், கையப்படுத்திய கையோடு பல ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திரும்ப வாருங்கள்
இதில் ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த பராக் அகர்வால் உள்பட பலரும் ஆரம்ப கட்டத்திலேயே பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கிடையில் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் சிலரை திரும்ப அழைத்துள்ளதாகவும் ப்ளூம்பெர்க் செய்திகள் கூறுகின்றது.
அவசியம் நீங்கள் வேண்டும்
இது ட்விட்டரால் தவறுதலாக பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும், இதனை பிறகு தான் நிர்வாகம் உணர்ந்து கொண்டுள்ளதாகவும், அவர்களின் பணி அனுபவம் நிர்வாகத்திற்கு அவசியம் தேவை என்றும், எலான் மஸ்கின் புதிய கட்டமைப்பில் அவர்கள் அவசியம் இருக்க வேண்டும் என நிர்வாகம் இருக்க விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
முக்கிய துறைகளில் பணி நீக்கம்
ட்விட்டரின் புதிய நிர்வாகம் பணி நீக்கம் என்பது பரவலாக பல துறையிலும் இருந்தாலும், இந்தியாவில் குறிப்பாக மார்க்கெட்டிங் பிரிவு, கம்யூனிகேஷன் பிரிவுகளிலும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதே அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் பொறியாளர்கள், ஐடி பிரிவு, டேட்டா அனலிடிக்ஸ், பாதுகாப்பு , கன்டென்ட், ஹெச் ஆர் துறை, மெஷின் லேர்னிங் உள்ளிட்ட முக்கிய துறைகளிலும் இந்த பணி நீக்கம் உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
செலவு குறைப்பு நடவடிக்கை
ஒரு புறம் செலவு குறைப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்தி வரும் ட்விட்டர் நிர்வாகம், மறுபுறம் வருவாயினை அதிகரிக்கும் விதமாகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக ப்ளூ டிக் கட்டணம், ட்விட்டரின் முக்கிய வருவாய் ஆதாரமாக இருக்கும் விளம்பரதாரர்களிடம் பேச்சு வார்த்தை என பல நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் தான் ட்விட்டரில் இத்தகைய நடவடிக்கையும் தொடங்கியுள்ளது எனலாம்.


Click it and Unblock the Notifications