இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் மார்ஷல் மேயர், காரெத் ஜான்சன். இருவருக்கும் உல்லாசமாக ஊர் சுற்றுவது தான் வேலையே. நாடோடியாக சுற்றித் திரிந்த அவர்களுக்கு திடீரென்று ஒரு தீவை விலைக்கு வாங்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. கையிலோ நயா பைசா கிடையாது.
ஆனால் மனசு வைத்தால் மார்க்கம் இருக்கும் என்பார்களே அந்தப் பழமொழி இவர்களுக்கு கனகச்சிதமாகப் பொருந்தியுள்ளது. இந்த நிலையில் 'Let's Buy an Island' என்ற பெயரில் கிரவுடுஃபண்டிங் முறையில் தீவு வாங்குவதற்கான நிதியைத் திரட்டத் தொடங்கினர்.

100 முதலீட்டாளர்களுக்கும் மேல் இருந்து நிதியை இருவரும் பெற்றனர். தீவின் விலையில் ஒரு பங்கு 3,250 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டது. இதன் மூலம் 1,80,000 அமெரிக்க டாலர்கள் மதிப்பில் பெலீஸ் நாட்டின் கடலோரமுள்ள காஃபி காயே (Coffee Caye) என்ற கரீபியன் தீவை விலைக்கு வாங்கினர்.
அவர்கள் வாங்கிய தீவு இப்போது முதலீட்டாளர்களுக்கு நிறைய லாபத்தை சம்பாதித்துத் தரும் சூப்பரான டூரிஸ்ட் ஸ்பாட்டாக மாறிவிட்டது.
பெலிஜியன்- லெபனானிய தம்பதியருக்குச் சொந்தமான இந்தத் தீவை 2019 ஆம் ஆண்டில் விலைக்கு வாங்கினர். தீவு முழுவதும் சதுப்புநிலங்கள், தென்னை மரங்களும் நிரம்பியிருந்தன.
லெட்ஸ் பை ஆன் ஐலாண்டு சிஇஓ மற்றும் இணை நிறுவனருமான காரெத் ஜான்சன் சொந்தமாக Young Pioneer Tours (YPT) என்ற டூர் அப்பரேட்டர் நிறுவனத்தை வைத்திருந்தார். வடகொரியா, நாகோர்நோ-காராபாக் போன்ற வழக்கத்துக்கு மாறான பகுதிகளுக்கு சுற்றுலாவை நடத்தி வந்தார்.

காஃபி காயே தீவு இன்னும் அதிகாரப்பூர்வமாக ஒரு சுதந்திர நாடாக அறிவிக்கப்படவில்லை. பெலீஜ் நாட்டின் அங்கமாகவே தற்போதும் உள்ளது.
தீவில் முதலீடு செய்துள்ள ஒவ்வொருவருக்கும் முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு ஜனநாயக அடிப்படையில் ஓட்டுரிமை தரப்பட்டுள்ளது. கடல் அரிப்பைத் தடுப்பதற்காக விரைவில் இந்த தீவை சுற்றி சுவர் ஒன்றை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
காஃபி காயே தீவுக்கு இப்போது ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வரத் தொடங்கி விட்டனர். அந்தத் தீவில் ஜாலியாகப் பொழுது போக்கவும், இயற்கைக் காட்சிகளை கண்டு ரசிக்கவும் ஏராளமான இடங்கள் உள்ளன.


Click it and Unblock the Notifications