சில நேரங்களில் நாம் எதிர்பாராத விதமாக செய்யும் செயல் நமக்கு சாதகமாய் அமைந்து விடும். அப்படித்தான் அமெரிக்காவைச் சேர்ந்த 2 தோழிகளுக்கு நடந்துள்ளது. எதார்த்தமாக டிக் டாக் வீடியோஸ் பார்த்துக் கொண்டிருந்த இருவரும் தங்களுக்குப் பிடித்த வீடியோவை ஒருவருக்கொருவர் பகிர்ந்துள்ளனர். இன்று அதையே பிசினஸ் ஆக்கி ரூ. 80 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியுள்ளனர். இது எப்படி சாத்தியமானது? என்ன தொழில் செய்து இந்த சாதனையை எட்டியுள்ளனர்? என்ற எல்லா விபரங்களையும் பார்ப்போம்.
2022-ஆம் ஆண்டில் சதர்ன் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் லியா மார்க்கஸ் மற்றும் யாசமன் பக்தியார். இவர்கள் இருவரும் கல்லூரியில் இருந்தே நண்பர்கள். 2023-ஆம் ஆண்டில் தற்செயலாக ஊறுகாய் தொடர்பான வீடியோக்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்துள்ளனர். அந்த சமயத்தில் ஆன்லைன் மூலமாக ஊறுகாய்களை மக்கள் அதிகம் வாங்குவதையும் கவனித்தனர். ஏன் இதையே ஒரு தொழிலாக மாற்றக்கூடாது என்று சிந்தித்த இருவரும் ஊறுகாய் பிசினஸில் இறங்கினர்.

உடனே தொடங்க வேண்டும் என்பதற்காக அவர்கள் யோசித்த ஆண்டின் கோடை காலத்தில் ஏற்கனவே பணி புரிந்த வேலையை விட்டுவிட்டு ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தனர். இரண்டு தோழிகளும் இணைந்து தங்கள் நிறுவனத்திற்கு "குட் கேர்ள் ஸ்னாக்ஸ்" என்று பெயரிட்டனர். பின்னர் பிப்ரவரி 2024-ஆம் ஆண்டு "ஹாட் கேர்ள்ஸ் பிக்கிள்ஸ்" என்ற தங்களுடைய முதல் உற்பத்தி பொருளை மார்க்கெட்டில் அறிமுகம் செய்தனர்.
குட் கேர்ள் ஸ்னாக்ஸ் நிறுவனம் லாஸ் ஏஞ்சல்ஸை தளமாகக் கொண்டு இயங்கி வருகிறது. ஆரம்பத்தில் ஆன்லைனில் மட்டுமே இவர்களுடைய பொருட்கள் கிடைத்தது. இவர்கள் நிறுவனத்திற்கு குட் கேர்ள் ஸ்னாக்ஸ் என்ற பெயர் வைக்க காரணம் என்ன தெரியுமா? இவர்கள் நிறுவனம் தொடங்கிய சமயத்தில் சமூக வலைத்தளங்களில் ஹாட் கேர்ள் வாக் மற்றும் கேர்ள் டின்னர் என்ற வார்த்தைகள் ட்ரெண்டானது. இதற்காகவே தங்கள் பிராண்டும் ட்ரெண்டாக வேண்டும் என்று எண்ணி இந்த பெயரை தேர்வு செய்தனர். அதோடு மட்டுமின்றி இளைஞர்களை கவரும் வகையில் பேக்கிங் செய்வதில் கவனம் செலுத்தினர்.
தொழில் தொடங்குபவர்களுக்கு ஆரம்பத்தில் என்ன பிரச்சனை ஏற்படுமோ? அதே பிரச்சனை இவர்களுக்கும் ஏற்பட்டது. பிசினஸ் செய்யும் முறைகளில் சற்று தடுமாறினர். அதற்காக அவர்களுடைய பல்கலைக்கழகத்தில் இருந்த நண்பர்களின் உதவியை நாடினர். முதலில் தங்களுடைய சொந்த சோசியல் மீடியா பக்கத்தின் மூலம் மட்டுமே விற்பனை செய்து வந்த இவர்கள் அதன்பிறகு நிறுவனங்களிடம் அனுமதி பெற்று ஹோல்சேல் ஃபுட் மார்க்கெட்டில் நுழைந்தனர்.
பிரபல பல்பொருள் அங்காடிகளில் தங்களுடைய பொருட்களை விற்பனை செய்ய ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் ஜாடிகளில் மட்டும் ஊறுகாய் விற்பனை செய்து வந்தனர். இப்போது வாடிக்கையாளர்கள் எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் பாக்கெட்டிலும் விற்பனை செய்து வருகின்றனர்.
பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட இந்நிறுவனம் சமீபத்தில் 3 மில்லியன் டாலர் வரை நிதி திரட்டியது. இதன் மூலம் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 8.5 மில்லியன் டாலரை எட்டியுள்ளது. இது இந்திய மதிப்பிற்கு சுமார் 81.4 கோடி ரூபாய்.
ஆரம்பத்தில் சில ஊறுகாய் வகைகளை மட்டுமே விற்பனை செய்தனர். அதன் பிறகு பெர்ஷியன், எகிப்தியன் மற்றும் பிற பாரம்பரிய உணவுகளையும் விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர். ஊறுகாய்களோடு மட்டும் இல்லாமல் நவீன பிராண்டிங் முறையில் இன்னும் பல ஸ்நாக்ஸ்களை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications

