இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடப்பது போலவே பாகிஸ்தானிலும் பிஎஸ்எல் என்ற பெயரில் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தியா பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணம் பிஎஸ்எல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருக்கின.
இந்தியாவிலும் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த சூழலில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீதமுள்ள பிஎஸ்எல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதற்கு திட்டமிட்டது. இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

மீதமுள்ள பிஎஸ்எல் போட்டிகளை நடத்தி கொடுக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்தது. ஆனால் இந்தியா பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் பிஎஸ்எல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதற்கு அனுமதி தராது என எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது.
பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்க எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் தயாராக இல்லை என அதன் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதாக எக்னாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டு இருக்கிறது. இந்தியா பாகிஸ்தான் இடையிலான எல்லை போர் பதற்றம் காரணமாக பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு ஐக்கிய அரபு அமீரகம் பிஎஸ்எல் போட்டிகளை நடத்தாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தெற்காசிய நாடுகளை சேர்ந்த பலரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கிறார்கள் . தற்போது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் நிலவும் வேளையில் பிஎஸ்எல் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது அங்கே பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் என்றும் அங்கே வசிக்கக்கூடிய வெளிநாட்டு மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தி மோதலுக்கு வழிவகுக்க வாய்ப்பு இருப்பதாகவும் எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் கருதுகிறதாம்.
முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீதமுள்ள 8 பிஎஸ்எல் போட்டிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டது. விரைவில் போட்டி நடத்தப்படும் தேதிகள் வெளியிடப்படும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் இதனை ஏற்க மறுத்திருப்பதாக கூறப்படும் நிலையில் பாகிஸ்தான் காலவரையின்றி போட்டியை நிறுத்தி வைக்க வேண்டிய சூழலுக்கு ஆளாகியுள்ளது.
கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் ஜம்முவின் பஹல்காம் பகுதியில் தாக்குதல் நடத்தினர். இதனை அடுத்து ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுமே பரஸ்பரம் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications