துபாய்: மேற்காசிய நாடுகளில் ஒரு வாரத்திற்கு மேலாக போர் நீடித்து வருகிறது. குறிப்பாக ஈரான் தொடர்ச்சியாக ஏவுகணை மற்றும் டிரோன்களை அண்டை நாடுகளின் மீது வீசிய வண்ணம் இருக்கிறது. சவுதி, துபாய், பஹ்ரைன் என சரமாரியாக தாக்கி வருகிறது. இந்த நாடுகளில் வசிக்க கூடிய இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என இந்திய தூதரகங்கள் வழியாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
உள்ளூர் அரசு வெளியிடக்கூடிய பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களையும் சரியான முறையில் பின்பற்ற வேண்டும் என தொடர்ச்சியாக கூறி வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய், அபுதாபி என பல்வேறு பகுதிகளிலும் ஏராளமான இந்தியர்கள் வசிக்கிறார்கள். வேலை வாய்ப்புக்காகவும் தொழில் ரீதியாகவும் லட்சக்கணக்கான இந்தியர்கள் இங்கே தங்கியுள்ளனர். இதுவரை ஈரான் தாக்குதலால் இங்கே வசிக்கும் இந்தியர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை.

இந்த சூழலில் தான் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்களுக்கு மிக முக்கியமான ஒரு எச்சரிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. ஈரான் போர் தொடங்கியது முதல் சமூக வலைத்தளங்களில் போலி செய்திகள் மற்றும் மாற்றி அமைக்கப்பட்ட வீடியோக்கள் புகைப்படங்கள் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன. இது துபாய், அபுதாபி உள்ளிட்ட நகரங்களில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற பதட்டங்களை உண்டாக்கி வருகிறது.
இதனை அடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அட்டார்னி ஜெனரல் Hamid Saif Al Shamsi முக்கியமான ஒரு எச்சரிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அதாவது துபாயில் வசிக்கக்கூடிய மக்கள் ஈரான் தாக்குதல் மற்றும் ஈரான் தாக்குதல் நடைபெற்ற இடங்கள் , அங்கே இருக்கும் இடிபாடுகள், சிதறிய ஏவுகணைகள், டிரோன்கள் உள்ளிட்டவற்றை புகைப்படம், வீடியோ எடுத்து வெளியிடக் கூடாது எனக் கூறியிருக்கிறார்.

இது போன்ற தகவல்களை பகிர்வது மற்றும் போலியான தகவல்களை பகிர்வதன் மூலம் சமூகத்தில் தேவையற்ற பதற்றங்கள் உண்டாவதாகவும் அதில் குறிப்பிட்டு இருக்கிறார். பொதுமக்களின் பாதுகாப்பே தங்களுக்கு முக்கியம் என தெரிவித்திருக்கும் அவர் துபாய் மற்றும் அபுதாபி உட்பட ஐக்கிய அரபு அமீரகத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இயல்பு வாழ்க்கை நீடிக்கிறது, தேவையில்லாமல் போலியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து அதனை கெடுக்கக் கூடாது என தெரிவித்திருக்கிறார்.
பொதுமக்கள் தாக்குதல் நடைபெற்ற இடங்களை புகைப்படம் எடுப்பது சமூக வலைத்தளங்களில் பகிர்வது உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் போலியான வீடியோக்கள், படங்கள் ஆகியவற்றை பகிர வேண்டாம் என தெரிவித்துள்ளார்.இதனை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருக்கிறார்.
அதாவது பொதுமக்கள் மத்தியில் பதற்றங்களை ஏற்படுத்தக்கூடிய வகையிலான பதிவுகளை பகிர்வது கிரிமினல் குற்றம் என அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார். ஐக்கிய அரபு அமீரகத்தின் சட்டத்தின் படி போலியான தகவல்களையும் மக்களை தவறாக வழிநடத்தக்கூடிய அறிக்கைகளையும் பகிரக்கூடிய நபர்களுக்கு ஒரு லட்சம் AEDஅபராதம் ஓராண்டு சிறை தண்டனையும் கிடைக்கும், மேலும் பொது மக்களிடையே பதற்றங்களை உண்டாக்கக்கூடிய பொது அமைதிக்கும் தேசிய பொருளாதாரத்திற்கும் குந்தகம் விளைக்கக்கூடிய அவசர காலங்கள் மற்றும் பேரிடர் காலங்களில் தவறான செய்திகளை பகிர்வோருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்க இந்த சட்டம் வழி செய்கிறது.
எனவே ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கக்கூடிய இந்தியர்கள் தங்களுக்கு வரக்கூடிய எந்த தகவல்களையும் உண்மை தன்மையை ஆராயாமல் பகிரக்கூடாது. அதேபோல தாக்குதல் நடைபெறும் இடங்கள் இடங்களுக்கு சென்று புகைப்படம் எடுப்பது வீடியோ எடுப்பது அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை செல்ல நேரிடும். எனவே துபாயில் வசிக்கக்கூடிய இந்தியர்கள் இந்த எச்சரிக்கையை கடுமையாக பின்பற்ற வேண்டுவது அவசியம்.


Click it and Unblock the Notifications