இந்தியாவில் ஆன்லைன் டாக்சி சேவை நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. பெரு நகரங்கள், 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களை தாண்டி தற்போது மாநிலங்கள் மத்தியிலான வர்த்தகம் வரையில் விரிவாக்கம் அடைந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவில் ஆன்லைன் டாக்சி சேவை பிரிவில் பல நிறுவனங்கள், பல மாநிலங்களில், நகரங்கள் அடிப்படையில் இயங்கினாலும் ஓலா மற்றும் உபர் ஆகிய இரு நிறுவனங்கள் மட்டுமே இந்திய அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஓலா இந்திய நிறுவனம், உபர் அமெரிக்க நிறுவனமாக இருந்தாலும் இந்திய மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் உபர் இந்தியாவுக்கு வந்து சுமார் 10 வருடமாகியுள்ளது, 2013 ஆம் ஆண்டில் முதல் முறையாக இந்தியாவில் தனது வர்த்தகத்தை துவங்கிய உபர் தற்போது சுமார் 125 நகரங்களில் இயங்கி வருகிறது. உபர் நிறுவனத்தில் தற்போது 8 லட்சம் ஓட்டுனர்கள் கோடிக்கணக்கான மக்களுக்கு சேவை அளித்து வருகின்றனர்.
உபர் நிறுவனத்தின் இந்த 10 வருட பயணத்தில் சுமார் 30 லட்சம் கார் ஓட்டுனர்களுக்கு நிலையான வருமானம் ஈட்டும் வாய்ப்பை கொடுத்துள்ளது. 2013 ஆம் ஆண்டு முதல் 30 லட்சம் கார் ஓட்டுனர்கள் 300 கோடி பயணங்கள் மூலம் சுமார் 50000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி உள்ளனர்.
இதேபோல் உபர் ஓட்டுனர்கள் இந்த 10 வருட காலத்தில் 3300 கோடி கிலோமீட்டர் பயணித்துள்ளனர், இதன் மூலம் சந்திராயன் 3 விண்கலம் தரையிறங்கியுள்ள நிலவை 86000 முறை சுற்றிவிடலாம். இந்த 10 வருட பயணம் குறித்து உபர் இந்தியா மற்றும் தென்னாசிய பிரிவின் தலைவரான பிராப்ஜீத் சிங் கூறுகையில் உபர் இந்திய மக்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறியுள்ளது என தெரிவித்தார்.
ஓலா நிறுவனத்தை ஒப்பிடுகையில் உபர் நிறுவனத்தின் சேவை எப்படி இருக்கு..? கடந்த 10 வருடத்தில் உபர் டாக்சி சேவையில் பயணித்துள்ளீர்களா..? இந்த பயணம் எப்படி இருந்தது என மறக்காம கமெண்ட் பண்ணுங்க.


Click it and Unblock the Notifications