உலகளாவிய டாக்சி சேவை நிறுவனமான உபர் இந்தியாவில் ஓலா நிறுவனத்தின் ஆதிக்கத்தை உடைக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் வேளையில், அமெரிக்கா, கனடா, பிரிட்டன் நாடுகளில் மிகவும் புகழ்பெற்ற சப்ஸ்கிரிப்ஷன் திட்டமான 'உபர் ஒன்'னை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், உபர் மூலம் தினமும் பயணம் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சலுகைகளையும் நன்மைகளையும் வழங்க உள்ளது.
உபர் ஒன் என்றால் என்ன?: உபர் ஒன் என்பது மாதாந்திர, காலாண்டு மற்றும் வருடாந்திர சப்ஸ்கிரிப்ஷன் திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ், பயணிகளுக்கு பயணச் கட்டணத்தில் தள்ளுபடிகள், டாக்சி புக்கில் முன்னுரிமை மற்றும் பல பிரத்தியேக சலுகைகள் வழங்கப்படும். மேலும், பயணிகளுக்கு உபர் கிரெடிட்களும் வழங்கப்படும்.

ஆனால் மாதாந்திர, காலாண்டு திட்டத்தை தேர்வு செய்யும் பயணிகளுக்கு இதை கேன்சல் செய்யும் ஆப்ஷன் வழங்கப்படுவதில்லை, வருடாந்திர திட்டத்தை மட்டுமே ரத்து செய்ய முடியும். சப்ஸ்கிரிப்ஷனை ரத்து செய்யும் போது, பயணிகளின் அனைத்து உபர் கிரெடிட்களும் இழப்பார்கள்.
உபர் ஒன் மூன்று வகையான சப்ஸ்கிரிப்ஷன் திட்டங்களை வழங்குகிறது:
மாதாந்திர திட்டம்: ரூ.149
மூன்று மாத திட்டம்: ரூ.349
ஆண்டு திட்டம்: ரூ.1,499
சோமேட்டோ உடன் கூட்டணி: உபர் ஒன் தனது சலுகைகளை மேலும் விரிவுபடுத்த, சோமடோவுடன் கூட்டணி அமைத்துள்ளது. வருடாந்திர திட்டத்தை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாத சோமேட்டோ கோல்டு சப்ஸ்கிரிப்ஷன் வழங்கப்படுகிறது. இதன் மூலம், உபர் பயண சேவையைத் தாண்டி உணவு டெலிவரியிலும் உபர் ஓன் மூலம் சலுகை கிடைக்கும்.
போட்டி சந்தை: இந்தியாவில் டாக்சி சேவை சந்தை நாளுக்கு நாள் போட்டி அதிகரித்து வரும் வேளையில், புதிய மற்றும் லாயல் கஸ்டமர்களை ஈர்க்கும் இலக்குடன் இந்தியாவில் உபர் ஓன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் தற்போது மத்திய அரசின் ONDC தளத்தின் வாயிலாக இயங்கும் நம்ம யாத்ரி நிறுவனத்தின் வளர்ச்சி உபர்-ஐ கடுமையாக பாதித்துள்ளது. இதேபோல் உபர், ஓலா மட்டுமே இருந்த இந்திய டாக்சி சந்தையில் ரேபிடோவும் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
உலகளவில், உபர் ஒன் 25 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுவது மூலம் புதிய மற்றும் லாயல் கஸ்டமர்களை ஈர்க்க முடியும் என தீவிரமாக நம்புகிறது.


Click it and Unblock the Notifications