அவசரமாகப் போகனும்னு ஓலா, உபர் டாக்சி தளத்தில் கேப் புக் செய்தால் ஓட்டுநர்கள் பொதுவாக எடுப்பது இல்லை, அருகிலேயே 10 -15 கேப் இருந்தாலும் அட்டன்ட் செய்வது இல்லை. அப்படி அட்டன்ட் செய்தாலும் எங்க போகனும்ன்னு கேட்டுட்டு உடனே கட் செய்துவிடுவார்கள். இந்தப் போக்கு கடந்த ஒரு வருடத்திற்கும் அதிகமான காலமாக இருந்து வருகிறது.
இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க உபர் நிறுவனம் கேப் ஓட்டுநர்களுக்குப் புதிய வெகுமதி திட்டமான Uber Pro அறிமுகம் செய்துள்ளது. மும்பை, பெங்களூரு, சென்னை, புனே, ஹைதராபாத், டெல்லி என்சிஆர், கொல்கத்தா, லக்னோ, சண்டிகர், அகமதாபாத், குவஹாத்தி மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் உபர் தளத்தில் வாகனங்களை இணைத்து இயக்கும் ஓட்டுநர்கள் இந்தத் திட்டத்தில் பதிவு செய்ய முடியும்.

மேலே கூறப்பட்ட நகரங்களில் உள்ள ஓட்டுநர்கள் 4.8 க்கும் அதிகமான வாடிக்கையாளர் ரேட்டிங் மற்றும் குறைந்த அளவிலான பயணத்தை ரத்துச் செய்தவர்கள் Uber Pro திட்டத்திற்குத் தகுதி பெறுவார்கள். இவை இரண்டும் தான் முக்கியத் தகுதி புள்ளிகளாக இருக்கும் வேளையில் ஓட்டுநர்களுக்கு நெருக்கடி உருவாகியுள்ளது.
உதாரணமாக ஒரு ஓட்டுநர் ஏற்கனவே அதிகப்படியான பயணத்தை ரத்துச் செய்திருந்தால் இனி வரும் காலத்தில் பயணத்தை ரத்துச் செய்யாமல் இயங்க வேண்டும். அப்போது தான் புதிய வெகுமதி திட்டமான Uber Pro-க்கு தகுதி பெற முடியும்.
மேலும் பயணிகளுக்கு ஓட்டுநர்கள் சிறப்பாகச் சேவை அளித்தால் தான் வாடிக்கையாளர்கள் ரேட்டிங் அளவான 4.8 ஐ எட்ட முடியும். உபர் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை மூலம் ஓட்டுநர்களால் சவாரிகளை ரத்து செய்வதைக் கட்டுப்படுத்தவும், பயணிகளுக்கான சேவையை மேம்படுத்த முடியும்.
இதேபோல் Uber Pro திட்டத்தின் கீழ் 4 அளவீடுகள் உள்ளது, ப்ளூ, கோல்டு, பிளாட்டினம், டைமெண்ட். ஒவ்வொரு ரைட் முடிவிலும் Uber Pro திட்டத்தில் தகுதி பெற்ற ஓட்டுநர்கள் ஒரு குறிப்பிட்ட பாயின்ட்ஸ் பெறுவார்கள். ஒவ்வொரு 3 மாதமும் இந்தப் பாயின்ட்ஸ் ரீசெட் செய்யப்படும்.
இந்தப் பாயின்ட்ஸ் வைத்து பல சேவைகளை ஓட்டுநர்கள் பெற முடியும் உதாரணமாகக் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் சேவை அளிப்பது, ஆட்டோமேட்டிக் ப்ரிமியர் சேவை தகுதி அடைதல், கார் சர்வீஸ் சலுகை போன்ற பல சலுகைகள் அளிக்கப்படும்.
இதோடு முக்கியமாக ப்ளூ, கோல்டு, பிளாட்டினம், டைமெண்ட் அடிப்படையில் 8000, 10000, 15000, 20000 ரூபாய் வரையிலான சிறு கடன்களும் அளிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications