மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் யூகோ வங்கியின் செப்டம்பர் 2020 காலாண்டு முடிவுகள் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த செப்டம்பர் 2020 காலாண்டில் யூகோ வங்கி 30.12 கோடி ரூபாய் நிகர லாபமாகக் கணக்கு காட்டி இருக்கிறது. ஆனால் கடந்த செப்டம்பர் 2019 காலாண்டில் இதே யூகோ வங்கி 891 கோடி ரூபாயை நிகர நஷ்டமாகக் கணக்கு காட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூன் 2020 காலாண்டில் யூகோ வங்கி 21.46 கோடி ரூபாயை நிகர லாபமாகக் கணக்கு காட்டி இருந்ததும் இங்கு நினைவு கூறத்தக்கது. ஆக கடந்த செப்டம்பர் 2019 காலாண்டை ஒப்பிட்டால் மட்டும் யூகோ வங்கியின் லாபம் அதிகரிக்கவில்லை. முந்தைய ஜூன் 2020 காலாண்டை ஒப்பிட்டாலும் யூகோ வங்கியின் நிகர லாபம் அதிகரித்து இருக்கிறது.
யூகோ வங்கியின் மொத்த வருமானம் (Total Income), இந்த செப்டம்பர் 2020 காலாண்டில் 4,326 கோடி ரூபாயாக குறைந்து இருக்கிறது. கடந்த செப்டம்பர் 2019 காலாண்டில், யூகோ வங்கியின் மொத்த வருமானம் 4,533 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
யூகோ வங்கியின் நிகர வட்டி வருமானம், இந்த செப்டம்பர் 2020 காலாண்டில் 3,614 கோடி ரூபாயாக குறைந்து இருக்கிறது. கடந்த செப்டம்பர் 2019 காலாண்டில் யூகோ வங்கியின் நிகர வட்டி வருமானம் 3,804 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வங்கி என்றாலே அதன் சொத்தின் தரம் கவனிக்க வேண்டிய விஷயம் தானே. யூகோ வங்கியின், சொத்தின் தரம் மேம்பட்டு இருக்கிறதாம். கடந்த செப்டபர் 2019-ல், யூகோ வங்கியின் தோராய செயல்படாத கடன்களின் (Gross Non Performing Asset) அளவு 21.87 சதவிகிதமாக இருந்தது. இந்த செப்டம்பர் 2020 காலாண்டில், யூகோ வங்கியின் தோராய செயல்படாத கடன் (GNPA) 11.62 சதவிகிதமாகக் குறைந்து இருக்கிறதாம்.
யூகோ வங்கியின் தோராய செயல்படாத கடன்களின் அளவு கடந்த செப்டம்பர் 2019-ல் 25,665 கோடி ரூபாயில் இருந்து, இந்த செப்டம்பர் 2020-ல் 13,365 கோடி ரூபாயாகச் சரிந்து இருக்கிறது.


Click it and Unblock the Notifications