சீனாவில் 90களுக்கு பின்பு ஏற்பட்ட மாற்றம் தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது, சீனா உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் பெரிய அளவில் வளர வேண்டும் என திட்டமிட்ட உடனே அந்நாட்டில் சரக்கு மற்றும் மக்கள் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்தி பயண நேரத்தை குறைக்க திட்டமிட்டது. இதற்காக சாலை, ரயில், கப்பல், வான் வழி என அனைத்து போக்குவரத்து சேவைகளிலும் பெரிய அளவில் மேம்படுத்தியது சீன அரசு.
தற்போது இந்தியாவும் இதே காலக்கட்டத்தில் தான் உள்ளது. கன்னியாகுமரி முதல் கஷ்மீர் வரையில் பல உள்கட்டமைப்பு திட்டங்கள் மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் பெரு நகரங்களை, சிறு நகரங்களுடன் சிறப்பான முறையில் போக்குவரத்து சேவையின் மூலம் இணைப்பது முக்கியம் என மத்திய மாநில அரசுகள் தீவிரமாக நம்புகிறது.

இதன் ஒரு பகுதியாக, இந்திய அரசு நாட்டின் 2ஆம் மற்றும் 3ஆம் நிலை நகரங்களை இணைக்கும் புதிய வான் வழி போக்குவரத்து சேவையை விரிவாக்கம் பணியில் தீவிரமாக உள்ளது. இதற்காக இந்தியாவில் பயன்படுத்தப்படாத, மறந்து போன விமான நிலையங்களையும், விமான ஓடுபாதைகளையும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில் அரசு அமைப்புகளும், சில தனியார் நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகிறது.
இந்தியாவில் மொத்தம் 450 விமான ஓடுதளங்கள் அதாவது Airstrip-களில் வெறும் 157 மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளது. இதை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நோக்கில், மக்களுக்கு நாடு முழுவதும் விமான பயண சேவை அளிக்க வேண்டும் என்ற இலக்குடன் மத்திய அரசு தனது UDAN திட்டத்துடனும், தனியார் துறையில் Zomato-வின் தீபிந்தர் கோயல் முதலீட்டில் இயங்கி வரும் LAT Aerospace போன்ற பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்தியாவில் இருக்கும் 450 ஏர்ஸ்ட்ரிப்-களும் பயன்பாட்டுக்கு வந்தால், மக்கள் விமானம் பயணத்தை பேருந்து பயணம் போல் எளிதாக பெற முடியும். இத்திட்டம் மட்டும் வெற்றி பெற்றால், விமான போக்குவரத்து துறை மட்டும் அல்லாமல் இந்தியாவில் நிலம் மதிப்பும் உயரும். நவி மும்பை, கிரேட்டர் நொய்டாவில் விமான நிலைய அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பல இடங்களின் நிலத்தின் விலை இரட்டிப்பாக்கியுள்ளது.
இத்தகைய சிறிய ஏர்ஸ்ட்ரிப்-களில் பெரிய விமானத்தை இயக்க முடியாது என்பதால் 30 இருக்கைகள் மட்டுமே கொண்ட சிறு விமானங்களை எளிதாக இயக்க முடியும். ஆனால் இது சுலபமல்ல, பொதுவாக நீண்ட தூர பயணத்தை காட்டிலும், பிராந்திய பயணங்களுக்கு எரிபொருள் செலவு அதிகம். இதோடு இந்தியாவில் பைலட் பற்றாக்குறை உள்ளது, விமான போக்குவரத்து துறையில் குறைவான உள்கட்டமைப்பு ஆகியவை பெரிய தடைகளாக உள்ளது.
பழைய விமான ஓடுதளத்தை வேகமாகவும், அதிக நன்மை அளிக்கும் வகையில் பயன்படுத்த வேண்டும் என்றால் பயணிகள் போக்குவரத்திற்காக பயன்படுத்துவதை தவிர்த்து, சரக்கு போக்குவரத்திற்காக முதலில் பயன்படுத்தலாம். உதாரணமாக 200 கிமீ தொலைவில் ஒரு நகரங்களுக்கு டெலிவரிக்காக லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்கள் இந்த வழிகளை எளிதாக பயன்படுத்த முடியும்.
பயணிகள் போக்குவரத்திற்கு இருப்பது போல் கடினமான கட்டுப்பாடுகள் சரக்கு போக்குவரத்திற்கு இருக்காது என்பதால், பழைய விமான ஓடுதளத்தை இதற்கு பயன்படுத்துவது பெரிய அளவில் நன்மை அளிக்கும்.


Click it and Unblock the Notifications