கொல்கத்தா: விமான நிலையங்களில் விற்பனை செய்யப்படும் டீ, காபி மற்றும் பிற உணவுப் பொருட்களின் விலை அதிக அளவில் இருப்பதாக தொடர்ந்து பயணிகளிடம் இருந்து புகார் வந்த வண்ணம் இருக்கிறது. ஒரு காபியின் விலை 200 ரூபாய்க்கு மேல் விற்கப்படுவதால் விமான பயணிகள் , விமான நிலையங்களில் விற்பனை செய்யும் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தான் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் உதான் யாத்ரி கஃபே என்ற பெயரில் மலிவு விலை உணவகங்களை விமான நிலையங்களில் தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி கடந்த டிசம்பர் மாதம் முதன்முறையாக கொல்கத்தாவில் இருக்கும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் உதான் யாத்ரி கஃபே என்ற மலிவு விலை உணவகம் திறக்கப்பட்டது. இங்கே ஒரு டீயின் விலை 10 ரூபாய் தான்.

இந்த உணவகம் திறக்கப்பட்டு ஒரு மாதம் ஆகி இருக்கும் நிலையில் விமான பயணிகளின் பிடித்தமான உணவகமாக இது மாறி இருக்கிறது என பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. நாள்தோறும் இந்த கடைக்கு சராசரியாக 900 பேர் வருகை தருகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. கடந்த டிசம்பர் 21ஆம் தேதியிலிருந்து ஜனவரி 21ஆம் தேதி வரை இந்த மலிவு விலை உணவகத்திற்கு 27,000 பேர் வந்து சென்றுள்ளனர் என இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவிக்கிறது.
கடந்த டிசம்பர் 21ஆம் தேதி மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராமமோகன் நாயுடு மலிவு விலை உணவகத்தை கொல்கத்தா விமான நிலையத்தின் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக திறந்து வைத்தார். அப்போது அவர் "நான் விமான போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து இந்தியாவில் விமான போக்குவரத்து மலிவானதாக மாற வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன். அதன் ஒரு பகுதியாக தான் உதான் யாத்ரி கஃபே திட்டத்தை தொடங்கி இருக்கிறேன்" என கூறினார்.
கொல்கத்தா விமான நிலையத்திற்கு வரக்கூடிய பயணிகள் பலரும் இந்த மலிவு விலை உணவகம் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என கருத்து தெரிவித்துள்ளனர் என அமைச்சர் ராம மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் நிறுவப்பட்டுள்ள மலிவு விலை உணவகம் வெற்றியடைந்திருப்பதால் இனி நாட்டின் அனைத்து விமான நிலையங்களுக்கும் உதான் யாத்ரி கஃபே கடைகள் விரிவாக்கம் செய்யப்படும் என நம்பப்படுகிறது.
முன்னதாக நடத்தப்பட்ட ஆய்வறிக்கை ஒன்றில் சுமார் 60 சதவீத விமான பயணிகள் விமான நிலையங்களில் விற்பனை செய்யப்படும் உணவு மற்றும் பானங்களின் விலை ரயில் நிலையங்களுடன் ஒப்பிடும்போது 100 முதல் 200% வரை உயர்வாக இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications